கட்டுமானத்தில் உள்ள தானா மேரா மருத்துவமனை இணைப்பு கட்டடத்தின் ஒரு பகுதி, நேற்றிரவு நடந்த ஒரு சம்பவத்தில் தீப்பிடித்தது.
இரவு 8.54 மணியளவில், இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக, தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் தலைமை உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் மொஹமட் ரஃபேன் மாட் ஜெய்ன் தெரிவித்தார்.
“தீ விபத்து, கட்டுமானத்தில் உள்ள ஏழு மாடிகள் கட்டிடத்தில் ஏற்பட்டது.
“மின் கம்பிகளை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ள கட்டிடங்களின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது தளங்களில் இந்தச் சம்பவம் நடந்தது” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
13 தீயணைப்பு வீரர்களின் உதவியோடு, 200 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த, தங்களுக்குக் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஆனது என்று மொஹமட் ரஃபேன் கூறினார்.
“தீயைக் கட்டுப்படுத்த மாச்சாங் நிலையத்திலிருந்து ஒரு எஃப்.ஆர்.டி.யின் (Fire Rescue Tender – தீ மீட்பு இயந்திரம்) உதவி எங்களுக்குக் கிடைத்தது.
“தீக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா