நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ் வைக்கப்பட்டுள்ள மாநிலங்களில் உள்ள உணவகங்களின் இயக்க நேரத்தை நீட்டிக்குமாறு 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இரவு 8 மணி வரையில் வரையறுக்கப்பட்ட இயக்க நேரம், வேலை நேரத்திற்குப் பிறகு உணவு வாங்க மக்களுக்குக் கடினம் என்று அவர்கள் விளக்கினர்.
“வர்த்தகர்கள் தங்கள் வணிக உரிமங்களின் கீழ் செயல்பட அனுமதிப்பது வர்த்தகர்களின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க உதவுவதோடு, உணவு விநியோக வருமானத்தையும் ஈட்டுகிறது; மேலும் வீட்டிலிருந்து ஆர்டர்களைப் பெறவும் முடியும், இதன்வழி, இரவு 8 மணிக்கு மேல் மக்களை வீட்டிலேயேத் தங்கவும் ஊக்குவிக்கும்.
“இந்தச் செந்தர இயங்குதல் நடைமுறை, அன்றாட வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் வர்த்தகர்களைப் பாதிக்கும் என்பதால் உடனடியாக அதை மேம்படுத்துமாறு தேசியப் பாதுகாப்பு மன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த 21 எம்.பி.க்களும், இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தனர்.
பி.கே.பி. நடைமுறையில் உள்ள பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர், சபா, கிளந்தான் ஆகிய மாநிலங்களிலும், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களிலும் உணவகங்கள், உணவு லாரிகள் மற்றும் பிற உணவுக் கடைகள் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும், எடுத்துச் செல்லுதல் மற்றும் விநியோக சேவைகளுக்காக மட்டுமே அவை திறந்திருக்கும்.
முன்னதாக, உணவகத்தின் இயக்க நேரத்தை நீட்டிப்பதற்கான அழைப்பு, மலேசிய இந்திய உணவக வர்த்தகர்கள் சங்கம் (ப்ரிமாஸ்) மற்றும் பல உணவு விநியோகிப்பாளர்களிடம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு (moratorium) வேண்டும் என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
“பி.கே.பியின் முதல் கட்டத்துடன் ஒப்பிடும்போது, வர்த்தகர்கள் இந்த நேரத்தில் அதிகப் பாதிப்புக்குள்ளாகக்கூடும், ஏனென்றால் கடை வாடகை மற்றும் பணியாளர் சம்பளத்தை முன்பைப் போல தடை இல்லாமல் செலுத்த வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.
அரசாங்கத்திடம் இக்கோரிக்கையை முன்வைத்த 21 மக்கள் பிரதிநிதிகளில், சைட் சட்டிக், ஹன்னா இயோ, சிவராசா இராசையா, சலாஹுட்டின் ஆயுப், தியோ நீ சிங், மாஃபுஸ் ஓமார், டாக்டர் மஸ்லி மாலிக், மரியா சின், வோங் ஷு கி, திரேசா கோக், டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட், கஸ்தூரிராணி பட்டு ஆகியோரும் அடங்குவர்.