அவசரக்காலப் பிரகடனத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பெஜுவாங் கட்சி மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு முறையீட்டுக் கடிதம் அனுப்பவுள்ளது.
இந்தக் கடிதம் நான்கு பெஜுவாங் எம்.பி.க்களின் கோரிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்று அதன் துணைத் தலைவர் மர்சுகி யஹ்யா கூறினார்.
“நாங்கள் கடிதத்தைத் தயார் செய்துவிட்டோம். இன்று அல்லது நாளை அக்கடிதம் அனுப்பப்படும்,” என்று மர்சுகி யஹ்யா மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த ஜனவரி 14-ம் தேதி, அவசரநிலை அறிவிப்பை இரத்து செய்து, மக்களவையைக் கூட்ட எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் பேரரசருக்கு மேல்முறையீட்டு கடிதத்தை அனுப்ப வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் தற்போது அவசரநிலை தேவையில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) கருதுகிறது என்றார் அவர்.
இதற்கிடையே, பி.கே.ஆர்.-இன் 95 எம்.பி.க்கள் ஒப்புதலுடனான முறையீட்டுக் கடிதம் ஒன்று தயாராகியுள்ளதாக, அன்வாருக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.
பி.கே.ஆர்., டிஏபி மற்றும் அமானாவைச் சேர்ந்த அனைத்து 91 பி.எச். எம்.பி.க்களையும் மீதமுள்ள சுயேட்சை எம்.பி.க்களையும் உள்ளடக்கியக் கடிதம் இன்று அனுப்பப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தாலும், அது எப்போது அனுப்பப்படும் என்பது இதுவரைத் தெளிவாகவில்லை.
“நாங்கள் பின்னர் ஊடகங்களுக்கு அறிவிப்போம். தற்போது எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை (கடிதம் வழங்குவது தொடர்பாக),” என்று பி.கே.ஆர். தொடர்புப் பிரிவு இயக்குநர் பாஹ்மி ஃபட்ஸில் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.
இதற்கிடையில், அன்வரின் அழைப்புக்கு அம்னோ எம்.பி.க்களும் பதிலளிப்பார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான், இந்த விஷயத்தைப் பற்றி மலேசியாகினி கேட்டபோது, “இல்லை” என்று மட்டும் சுருக்கமாகப் பதிலளித்தார்.
Idiots