‘அஸ்மினுக்கு எதிரான கோம்பாக் வாக்காளர்களின் வழக்கு, அரசியல் குற்றங்களுக்கான மறுமொழி ‘

முன்னாள் ஜொகூர் பாரு எம்.பி. ஷாஹ்ரீர் சமாட், கோம்பாக் வாக்காளர்கள் 10 பேர், எம்.பி. அஸ்மின் அலிக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள வழக்கு “அரசியல் குற்றத்தை” எதிர்ப்பதற்கான ஒரு வழி என விவரித்தார்.

தனது முகநூல் பதிவில், அம்னோ மூத்தத் தலைவருமான அவர், பிரதமர் முஹைதீன் யாசினின்  அரசாங்கம் பல “அரசியல் தவளைகளால்” ஆனது என்றாலும், அது இன்னும் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று கூறினார்.

“எனவே, நம்பகமான கடமை மற்றும் மோசடிக்கு இழப்பீடு கோரி, அஸ்மினுக்கு எதிரான 10 கோம்பாக் வாக்காளர் குழுவின் வழக்கு – ‘கோம்பாக் டென்’ (‘Gombak Ten’) – கட்சி தாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வாக்காளர்கள் கொடுக்கும் பதிலடி.

“நம் நாட்டில், மக்கள் பிரதிநிதிகள் அசல் கட்சியை விட்டு வெளியேறுவது போன்ற ஓர் அரசியல் ‘குற்றம்’ நிகழும்போது, வாக்காளர்கள் மறுதேர்தலுக்கு மனு கொடுக்க அனுமதிக்கும் ஒரு ‘நினைவுகூரும் முறை’ இல்லை,” என்று அவர் கூறினார்.

நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கான பங்களிப்பாக, இந்த சிவில் வழக்கை நீதிமன்றம் செவிமடுக்க முடியுமா என்பதையும் கவனிக்க இந்த வழக்கு சுவாரஸ்யமானது என்று ஷாஹ்ரீர் கூறினார்.

“என்னைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஒரு நம்பகமான கடமை இருக்க வேண்டும், தனது வாக்காளர்களை ஏமாற்ற முடியாது என்பதை அங்கீகரிப்பதன் மூலம் அரசியல் குற்றங்களை வெல்ல ஒரு வழி இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில், 1988-ம் ஆண்டு, ஜொகூர் பாரு நாடாளுமன்ற ஆசனத்தைக் காலி செய்து, ஒரு சுயேச்சை வேட்பாளராக இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினராக ஷாஹ்ரீர் சாதனை படைத்துள்ளார்.

மலேசிய அரசியலமைப்பு நெருக்கடிக்கு ஒரு வருடம் கழித்து – 1990, 1995 மற்றும் 1999 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிடாமல் – 2018-ல் தனது மூன்று தவணை பதவியை மீண்டும் பெறுவதற்கு முன்பு ஷாஹ்ரீர் மீண்டும் அம்னோவில் சேர்ந்தார்.

2018-ம் ஆண்டில் ஷாஹ்ரீர் பி.கே.ஆர். இளைஞர் தலைவர் அக்மல் நசீரிடம் தோற்றார்.

வழக்குரைஞர் யோஹேந்திர நடராஜன் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கோம்பாக் வாக்காளர்கள், அஸ்மின் தொடர்பாக ஒன்பது நீதிமன்ற அங்கீகாரங்களைக் கோரியுள்ளனர். அதில், அந்த முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தனது நம்பகமான கடமைகளை எவ்வாறு மீறினார் என்பது உட்பட.

அஸ்மின் இந்த வழக்கை இரத்து செய்ய ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது, அவ்வழக்கு நடவடிக்கைக்குத் தகுந்த காரணங்கள் இல்லை, அல்லது அந்த வழக்கு அவதூறானது, எரிச்சலூட்டும் மற்றும் அற்பமானதாகக் கருதப்படுகிறது என்ற காரணங்களோடு.