நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) தற்போது செயல்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் உள்ள உணவகங்களின் இயக்க நேரங்களை நீட்டிக்க முடியுமா, இல்லையா என்பது குறித்து அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும்.
இரவு 8 மணி வரையிலான கால அவகாசம், அவர்களின் இரவு உணவிற்கு, குறிப்பாக தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பது கடினமாக இருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து அரசாங்கத்திற்குப் புகார்கள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோபைத் தொடர்பு கொண்டபோது, கோவிட் -19 தொற்றின் நேர்மறையான தினசரி வழக்குகளையும் தனது தரப்பு பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.
“வேறுசில தரப்பினரிடமிருந்தும் எங்களுக்குக் கேள்விகள் எழுந்துள்ளன. உணவகங்களுக்கு இரவு 10 மணி வரையில் அனுமதி அளிக்கப்படும்போது, மற்ற அனைத்து வணிக வளாகங்களும், இரவு 10 மணி வரை கடையைத் திறந்து வைத்திருக்குமா என்று?
“(தற்போதைய) பாதிப்புகள் இன்னும் 3,000-க்கும் அதிகமாக உள்ளது. இதுவும் கடினம், எனவே சுகாதார அமைச்சு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தட்டும்,” என்று அவர் மலேசியாகினிக்குத் தெரிவித்தார்.