சிறையில் பாலியல் கொடுமை: ஜீரணிக்கமுடியாத கொடூரம்

 இராகவன் கருப்பையா – நம் நாட்டில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு பிரச்னை போலீஸ் தடுப்புக்காவலில் தொடர்ந்தார்போல் நிகழ்ந்துவரும் மரணங்கள்.

இப்பிரச்சனையைக் களைவதற்கு தேசிய முன்னணி ஆட்சி செய்த காலம் தொடங்கி பின்னர் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கம் வரையில் பல்வேறு தரப்புகள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து வருகிற போதிலும் தீர்வுக்கான சாத்தியத்தை இன்னமும் காணவில்லை என்பதுதான் உண்மை.

இயல்நிலை சூதாட்டம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு 16 வயது பெண் மற்றொரு தடுப்புக்காவல் கைதியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இந்நேரம் நாட்டை உலுக்கியிருக்க வேண்டிய இந்த சம்பவம் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.

காவல் நிலையத்திற்கு உள்ளேயே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் வேறு எங்குத்தான் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழத்தான் செய்கிறது.

சம்பந்தப்பட்ட அப்பெண் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறையை திறப்பதற்கு அந்த கயவனுக்கு சாவி எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை.

அங்கிருந்து அவளை வெளியே அழைத்துச் சென்ற அவன் போலீஸ் நிலைய கழிவறையில் அக்குற்றத்தை புரிந்ததாக நம்பப்படுகிறது.

ஏற்கெனவே குற்றச்சாட்டை எதிர்நோக்கி தடுப்புக்காவலில் உள்ள ஒரு நபருக்கு அங்கேயே மற்றொரு குற்றத்தைப் புரிய எப்படி துணிச்சல் வந்தது? இதற்கு யார் வழி வகுத்தது?

சம்பவம் நடந்தது உண்மைதான் என பூர்வாங்க விசாரணையின் வழி தெரிய வந்துள்ளதாக சரவாக் காவல்துறை ஆணையர் அய்டில் இஸ்மாயில் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் பதில் இல்லாதக் கேள்விகள் நிறையவே உள்ளன.

சம்பந்தப்பட்ட அந்த தடுப்புக்காவல் அறையில் மறைக்காணி உள்ளது, ஆனால் நடப்புகளை பதிவு செய்வதற்கான அம்சங்கள் அந்த கருவியில் இல்லை. வெறும் கண்காணிப்பு வசதிகளை மட்டுமே அந்த மறைக்காணி கொண்டுள்ளது என அய்டில் குறிப்பிட்டது வியப்பாகத்தான் உள்ளது.

அரைகுறை அம்சங்களைக் கொண்ட ஒரு மறைக்காணியை யார் அங்கீகரித்தது என்ற ஒரு கேள்வியும் நம்மை துளைக்கத்தான் செய்கிறது.

இம்மாதம் 9ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தை அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் செனட்டர் எலன் லிங் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து பெண் உரிமை போராட்டவாதியும் பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கஸ்தூரி ராணி பட்டு கடந்த 16ஆம் தேதியன்று அது குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்நேரம் கொதித்து எழுந்திருக்க வேண்டிய பெண் உரிமை அமைப்புகள் சாவகாசமாக சோம்பல் முறித்துக் கிடப்பதுதான் நமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளிலும் மகளிர் மற்றும் புத்ரி பிரிவுகள் உள்ளன. எனினும் அவர்களிடமிருந்து இப்போதைக்கு பெரிதாக எதனையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் கடந்த 10 மாதங்களாகவே அவர்கள் அனைவருமே படு ‘பிஸி’.  பெரும்பாலான அரசியல்வாதிகளின் கழுகுப் பார்வையெல்லாம் தற்பொழுது ஆட்சி அதிகாரம், பதவி சுகபோகங்கள் மீதுதான் என்பதை நாம் மறுக்க இயலாது.

ஆனால் தனியார் அமைப்புகளும் அரசுசாரா இயக்கங்களும், குறிப்பாக பெண் உரிமை சம்பந்தப்பட்ட அமைப்புகளும் மனித உரிமை இயகங்களும் இதுபோன்றக் கொடூரங்களுக்கு எதிராக உடனே குரல் கொடுக்காமல் அலட்சியமாக சோம்பிக்கிடப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சிறார் உரிமை அறக்கட்டளை மற்றும் சூரியானா சமூகநல இயக்கம் போன்ற ஒருசில அமைப்புகள் சாவகாசமாக இப்போது எழுந்து வந்துள்ள போதிலும் பெரும்பாலான பொதுநல இயக்கங்களின் மெத்தனப் போக்கு மிகவும் வருத்தமளிக்கக்கூடியதாகவே உள்ளது.

இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக அதிக அளவில் நாம் குரல் எழுப்பாமல் ஏனோ தானோ என அலட்சியமாக இருப்போமேயானால் வரும் காலங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் போகலாம்.

அதுமட்டுமின்றி காலங்காலமாக காவல் நிலையங்களில் நிகழ்ந்துவரும் தடுப்புக்காவல் மரணங்களைப் போல ‘இதுவும் கடந்து போகும்’.

குற்றவாளி ஒரு தடுப்புக்காவல் கைதி என்ற போதிலும் நிகழ்ந்துள்ள சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது போலீசாரின் கடப்பாடாகும்.

காவல்துறையினர் தங்கள் பணிகளில் சற்று கவனமாக இருந்திருந்தால் இந்தக் கொடூரத்தை அவர்கள் தவிர்த்திருக்க முடியும்.

[Picture – Ling (second right) and Low (left) accompanied the victim’s father (second left) to lodge a police report regarding the incident here this afternoon. – Borneo Post ]