அவசரநிலை பொருளாதாரத்தைப் புதுப்பிக்கிறது :  தெங்கு ஜஃப்ருலுக்கு நஜிப் ‘சவால்’

கோவிட் -19 தொற்றை எதிர்கொள்வதற்காக, நாடாளுமன்றத்தை இடைநிறுத்திய உலகில் ஒரு நாட்டை பெயரிடுமாறு நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸுக்கு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று ‘சவால்’ விடுத்தார்.

சமூக ஊடக இடுகை ஒன்றில், எந்தவொரு நாடும் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவசரகாலத்தை அறிவிக்கவும், நாடாளுமன்றத்தை இடைநிறுத்தவும் செயல்படவில்லை என்று நஜிப் பகடியாகக் கூறியிருந்தார்.

“நேர்மையாக இருங்கள், சகோ. இந்த நடவடிக்கையால் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்பது உண்மை என்றால், மற்ற நாடுகள் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தாதது ஓர் இழப்பு,” என்று அவர் கூறினார்.

கோவிட்டின் அச்சுறுத்தல் காரணமாக அவசரகால நிலையை அறிவித்த 80 நாடுகளுடன் மலேசியாவை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.

“பிற நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்குக் காரணம், இயக்கக் கட்டுப்பாடு அறிவிப்புக்கு அந்த அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதனாலேயே, அந்நாடுகள் நம்மை போன்று அவசரநிலை அறிவிப்பு இல்லாமல் நடமாட்டக் கட்டுப்பாட்டை அறிவிக்க இயலாது.

“அவர்கள் நாடாளுமன்றத்தை ஒருபோதும் இடைநிறுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அவசரகாலப் பிரகடனம் முதலீட்டாளர்களைப் பயமுறுத்துகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது, அதற்குப் பதிலாக அது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவக்கூடும் என்று தெங்கு ஜஃப்ருல் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதற்கு அவசரகால நிலையை அறிவித்த உலகின் 80 நாடுகளில் – அல்லது உலகின் கிட்டத்தட்ட பாதி – மலேசியாவும் ஒன்றாகும் என்று ஜஃப்ருல் கூறினார்.