சுஹாகாம் : 355 சட்டத் திருத்தங்கள் மனித உரிமைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்க

ஷரியா நீதிமன்றங்கள் (குற்றவியல் அதிகார வரம்பு) 1965 சட்டத்தில் (சட்டம் 355 என்றும் அழைக்கப்படும்) திருத்தம் செய்வதற்கானத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அது சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு ஏற்ப உள்ளதை உறுதிசெய்ய.

அனைவருக்குமான மனித உரிமை கொள்கைகள், பங்குதாரர்களுடனான உரையாடல் அமர்வுகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை மதித்து, அரசாங்கம் மிகவும் அக்கறையுள்ள அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு (சுஹாகாம்) கூறியுள்ளது.

சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனைகள் மனித உரிமைத் தரங்களின்படி, குறிப்பாக மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனம் (யு.டி.எச்.ஆர்.) படி கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன என்று சுஹாகாம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

கசையடி மனித உரிமை மீறலாகக் கருதப்படும் தண்டனை, என்று சுஹாகாம் கூறுகிறது.

“ஒவ்வொரு நபருக்கும் – அவர்களின் பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் – கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அதே அடிப்படை உரிமைகள் இருக்க வேண்டும், இதில் தனியுரிமைக்கான உரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை ஆகியவையும் அடங்கும்,” என்று சுஹாகாம் வலியுறுத்துகிறது.

பெட்பியர் (லெஸ்பியன்), ஆணியர் (கேய்), இருபான்மி (பைசெக்ஸுவல்) மற்றும் பால்மாற்றி (எல்ஜிபிடி) மக்களுக்கு எதிரான சட்டங்களைத் திருத்தி, கடுமையாக்குவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று நேற்று மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

பிரதமர் திணைக்களத்தின் துணையமைச்சர் அஹ்மத் மர்சுக் ஷாரி கூறுகையில், சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கைகள் மற்றும் தவறான நடத்தைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால் இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டது என்றார்.

அவரைப் பொறுத்தவரை, இது சட்டம் 355-இன் திருத்தங்களை உள்ளடக்கும்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​பாஸ் சட்டம் 355-இன் திருத்தத்திற்காகத் தொடர்ந்து போராடியது, இது அக்கட்சிக்கான ஆதரவை ஈர்ப்பதற்கான வழிகளில் ஒன்றாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத் திருத்தத் திட்டம், ஒருமுறை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் தனிப்பட்ட பிரேரணை மூலம் மக்களவைக்குக் கொண்டு வரப்பட்டது, ஆனால் அது விவாதிக்கப்படவில்லை. பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஒப்பந்தத்தை மீறுவதற்கான பாஸ்-இன் நடவடிக்கை அது என்று பின்னர் விமர்சிக்கப்பட்டது.

பாஸ் தற்போது தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

சர்வதேச மனித உரிமை தரத்திற்கு ஏற்ப கசையடி தண்டனை இல்லாததால் – சிவில் அல்லது ஷரியா சட்டத்தில் இருந்தாலும் – அதனை இரத்து செய்ய வேண்டும் என்று தாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக சுஹாகாம் கூறியது.

“மாநில ஷரியா சட்டத்தின் படி, பெண் குற்றவாளிகளுக்குக் கசையடி விதிப்பது மத்திய அரசியலமைப்பின் 8-வது பிரிவில் முரணானது, ஏனெனில் கூட்டாட்சி குற்றவியல் நடைமுறை விதிகள், பெண் குற்றவாளிகளுக்குக் கசையடியிலிருந்து விலக்கு அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.