பிரதமர் : ‘பாலினம் தொடர்பான வெறுப்பு பேச்சுக்குக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்’

பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை அடிப்படையிலான துன்புறுத்தல் உள்ளிட்ட வெறுக்கத்தக்கப் பேச்சுக்கு, ஆசியான் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் பரிந்துரைத்தார்.

இலக்கமுறை ஊடகத் தளங்களில் பகிரப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராகச் செயல்பட இச்சட்டம் பயன்படலாம் என்றார் அவர்.

“வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான கடுமையான சட்டத்தை ஆசியான் கருத்தில் கொள்ள வேண்டும், வன்முறையையும் தாக்குதலையும் வேண்டுமென்றே ஊக்குவிக்கும் எந்தவொரு பேச்சையும், வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ, துன்புறுத்தல் உட்பட மற்றும் இனம், பாலினம், மதம், பாலியல் நோக்குநிலை, இயலாமை அல்லது தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபர் அல்லது அவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நீக்க, மற்றும் / அல்லது தண்டிக்க அச்சட்டம் இலக்கமுறை ஊடகத் தளங்களை வற்புறுத்தலாம்,” என்று அவர் கூறினார்.

இன்று, மெய்நிகர் முறையில் நடைபெற்ற முதல் ஆசிய இலக்கமுறை அமைச்சர்கள் கூட்டத்தில் (ADGMIN1) முஹைதீன் தனது சிறப்பு உரையில் இதனைக் கூறினார்.

இருப்பினும், பிரதமரின் அந்த உரை, கடந்த புதன்கிழமை பிரதமர் திணைக்களத்தின் (மத விவகாரங்கள்) துணை அமைச்சர் அஹ்மத் மர்சுக் ஷாரி வெளியிட்ட அறிக்கைக்கு முரண்பட்டதாக உள்ளது.

பெட்பியர் (லெஸ்பியன்), ஆணியர் (கேய்), இருபான்மி (பைசெக்ஸுவல்) மற்றும் பால்மாற்றி (எல்ஜிபிடி) மக்களுக்கு எதிராக, சட்டங்களில் திருத்தம் செய்து, கடுமையானதாக்கும் சாத்தியத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை என்று அந்தப் பாஸ் தலைவர் சொன்னதாகக் கூறப்படுகிறது.

பாலினத்திற்கு ஏற்ப ஆடை அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.