ஜனவரி 28-ம் தேதி, தைப்பூச நிகழ்வு விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணனும் பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமியும் விமர்சித்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட இரண்டு வெவ்வேறு அறிக்கைகளில், கோவிட் -19 காரணமாக தைப்பூசக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், விடுமுறைகள் தேவையில்லை என்று அர்த்தமல்ல எனச் சரவணனும் இராமசாமியும் கூறினர்.
சரவணனின் கூற்றுப்படி, மலேசிய இந்துக்கள் கெடா மந்திரி பெசாரின் (முஹம்மது சனுசி நோர்) அறிவிப்பில் கோபமும் ஏமாற்றமும் கொண்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் இது இந்து மத நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு இந்துக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை.
“நாம் கோவிலுக்குச் செல்ல முடியாததால், அதை வீட்டில் கொண்டாடவில்லை என்று அர்த்தமல்ல,” என்று அவர் கூறினார்.
மேலும், தைப்பூசம் நண்பர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்கும் ஒருநாள் அன்று, மாறாக சில நடைமுறைகளின் வழி முருகக் கடவுளுக்கு நேரம் ஒதுக்கும் ஒரு நாள் என்றார் சரவணன்.
“இந்த ஆண்டு இந்துக்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றாலும், நாங்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம், எங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தேவையானதைச் செய்யலாம்,” என்று அவர் கூறினார்.
தைப்பூசத்திற்கு நிகழ்வு விடுமுறைகளை நிர்ணயிப்பது மாநில அரசின் தனிச்சிறப்பு என்பதை ம.இ.கா. துணைத் தலைவருமான அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், பாஸ் கட்சியின் மாநில அரசாங்கம் முடிவெடுப்பதற்கு முன்பு, கூட்டாட்சி மட்டத்தில் இருக்கும் இந்தியப் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் அது பெற வேண்டும் என்றார் அவர்.
எளிய விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமலில் இருப்பதாலும், திருவிழாவுடன் இணைந்த அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாததாலும், இந்த ஆண்டு தைப்பூச விடுமுறையை இரத்து செய்ய கெடா மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
“விடுப்பு இல்லை. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் இல்லாததால், நிகழ்வு விடுமுறை இல்லை,” என்றார் சனுசி.
தைப்பூசத்திற்குக் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் உட்பட, கெடா, பினாங்கு, சிலாங்கூர், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் நிகழ்வு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலங்களிலும் கொண்டாட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் விடுமுறையை அவை இரத்து செய்யவில்லை.
முடிவெடுப்பதற்கு முன்னர், ம.இ.கா.விடம் கெடா மாநில அரசு கருத்து கேட்கவில்லை, அப்படி கேட்டிருந்தால் விடுமுறையை இரத்து செய்ய கட்சி ஒருபோதும் அனுமதித்திருக்காது என்றும் சரவணன் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, கெடா மாநில அரசு எடுத்த இந்நடவடிக்கை, அடுத்தப் பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணிக்கான வாய்ப்புகளைப் பாதிக்கும், ஏனெனில் மாநிலத்தின் பல தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான இந்து வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கிடையில், பல்வேறு வகையான திருவிழாக்கள் இரத்து செய்யப்பட்ட போதிலும், தைப்பூசத்தின் முக்கியத்துவத்தை அது மறுக்கவில்லை என்று இராமசாமி கூறினார்.
“கொண்டாட்டத்தை இரத்து செய்ததன் மூலம், தைப்பூசம் இரத்து செய்யப்பட்டதாகப் பொருள்படாது, அதற்குப் பதிலாக வீட்டில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அது கொண்டாடப்படும். துரதிர்ஷ்டவசமாக சனுசியால் இந்த எளிய விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“தைப்பூசம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் விடுமுறை நாட்களை இரத்து செய்தலோடு இணைக்க, பிரிக்க அவருக்குப் புரிதல் இல்லை போலும்.
“இந்தத் தொற்று தைப்பூசம் தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டுமே தடைசெய்துள்ளது, ஆனால் மத விழாவின் முக்கியத்துவத்தை அல்ல.
“ஆக, அவர் ஏன் விடுப்பை இரத்து செய்ய வேண்டும்? இது அவருக்குத் தேவையில்லாதது,” என்று இராமசாமி கூறினார்.