ஜனவரி 28-ம் தேதி தைப்பூச நிகழ்வு விடுமுறை இல்லை என்ற பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசின் முடிவு, மாநில இந்துக்களின் உரிமைகளை மறுப்பதற்கான நோக்கம் கொண்டது அல்ல.
கோவிட் -19 பரவலைத் தடுக்க, செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி.) இணங்கி, இந்துக்கள் எங்கு வேண்டுமானாலும் அத்திருவிழாவைக் கொண்டாடலாம் என்று மந்திரி பெசார் முஹம்மது சனுசி கூறினார்.
“எல்லோரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பி.கே.பி.) விடுமுறையில்தான் இருக்கிறார்கள். இதுவரை, கெடாவில் தைப்பூச விடுப்பு இல்லை, இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்வு விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அல்ல இது.
“கெடாவின் இந்த முடிவு, மாநிலத்தில் உள்ள யாருடைய உரிமைகளையும் ஒதுக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டது அல்ல. (நாடு) சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, கெடாவில் தைப்பூசத்திற்கு நிகழ்வு விடுமுறை இல்லை என்றாலும், இன்னமும் கெடாவில் சுதந்திரமாகவும் கலகலப்பாகவும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது,” என்று அவர் இன்று அலோர்ஸ்டாரில் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கோவிட் -19 சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு கெடாவில் நிகழ்வு விடுப்பு இல்லை என்று நேற்று மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் முஹம்மது சனுசி தெரிவித்தார்.
இந்த முடிவைப் பல அரசியல் தலைவர்கள், குறிப்பாக மனிதவள அமைச்சர் எம் சரவணனும் பினாங்கு துணை முதல்வர் II டாக்டர் பி இராமசாமியும் விமர்சித்தனர்.
இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்ற முகமது சனுசி, நாடு இப்போது ஒரு பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது, அது எப்போது வெற்றிகரமாக தீர்க்கப்படும் என்று தெரியவில்லை என்றார்.
“பி.கே.பி. மற்றும் அவசரநிலை அமலில் உள்ளது. எந்தவொரு கொண்டாட்டத்தையும் எஸ்.ஓ.பி.-க்கு இணங்க நடத்தலாம். எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டாம். இது பாதுகாப்பு மற்றும் அனைத்து மலேசியர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம்.
“மஇகாவில் உள்ள சிலர் தைப்பூசக் கொண்டாட்டத்திற்குப் பொது விடுமுறையை விரும்பினால், அவர்கள் நாடு முழுமைக்கும் ஒரு பொது விடுமுறையை அறிவிக்க மத்திய அரசை வற்புறுத்தலாம். இந்த விஷயத்தில் கெடாவுக்கு ஏற்கனவே ஒரு முடிவு உள்ளது,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா