என்.யூ.பி.இ.  : தைப்பூசத்திற்குக் குரல் கொடுத்த சரவணன், தொழிலாளர்களின் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன்

வங்கி ஊழியர்களின் தேசிய ஒன்றியத்தின் (என்.யூ.பி.இ.) தலைமைச் செயலாளர் ஜே சாலமன், மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன், இனவாத அரசியல் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுப்பதாகவும், ஆனால் தொழிலாளர்களின் விஷயங்களில் மௌனம் காப்பதாகவும் கூறியுள்ளார்.

“குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயின் இந்தக் கடினமான நேரத்தில், தொழிலாளர்களை மோசமாக பாதிக்கும் பிரச்சினைகள் எழும்போது சரவணன் பொதுவாகத் தயக்கம் காட்டுகிறார்.

“அவருக்குத் தொடர்புடைய ஏராளமானப் பிரச்சினைகளை என்.யூ.பி.இ. எழுப்பிய போதிலும், அவர் அதில் அமைதி காத்து வந்தார், இது அவரின் முழுமையான ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.

“ஆனால் கெடாவில் தைப்பூச விடுமுறை பிரச்சினை வந்தபோது, ​​கெடா மந்திரி பெசாரைத் தாக்கி உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்,” என்று சாலமன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

ம.இ.கா. துணைத் தலைவரான சரவணன், இந்தப் பிரச்சனையினால் ​​எதிர்காலத்தில், தேர்தல்களில் கட்சி பாதிக்கப்படும் என்று அவர் கூறியது, அரசியலுக்கு மட்டுமே அவர் முன்னுரிமை கொடுப்பதைக் குறிக்கிறது என்று சாலமன் கூறினார்.

ஹாங்காங், ஷாங்காய் வங்கி கார்ப்பரேஷனின் (எச்எஸ்பிசி) வேலைகள் மற்றும் தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வுகாண அழைப்பு விடுத்ததை என்.யூ.பி.இ. சரவணனுக்கு நினைவுபடுத்த விரும்புகிறது என்று அவர் கூறினார்.

“துரதிர்ஷ்டவசமாக, அவர் அதில் மௌனம் காப்பதோடு, என்.யூ.பி.இ.-க்குப் பதிலளிக்கவும் மறுத்துவிட்டார். மேலும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை.

“அவருக்கு ஏராளமான நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.”

டிசம்பர் 16-ம் தேதி, புகார் தொடர்பில் செயல்படுமாறு பிரதமர் முஹைதீன் யாசின் சரவணனுக்குக் கடிதம் எழுதியதாகவும் சாலமன் குற்றம் சாட்டினார்.

“நாமும் அவருக்குப் பிரதமரின் உத்தரவை நினைவுபடுத்தினோம், ஆனால் சரவணன் இப்போதுவரை என்.யூ.பி.இ.-க்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். தொழிலாளர்களின் துன்பங்களை அவர் புறக்கணிக்கக்கூடாது,” என்று சாலமன் கூறினார்.

தொடர்பு கொண்டபோது, ​​சாலமனின் கூற்றுக்களைச் சரவணன் நிராகரித்தார், அமைச்சின் பணிகள் பற்றி அவருக்குத் தெரியாது என்றார்.

“நாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், சாலமன் என்னைக் குறை கூற முடியாது. தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நாங்கள் எச்எஸ்பிசியுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

“எச்எஸ்பிசியுடனான பிரச்சினை ஓர் அரசியல் பிரச்சினை அல்ல, கெடா மந்திரி பெசாருக்குப் பதிலளித்தது போல், நான் உடனடியாக அறிக்கை வெளியிடுவதற்கு,” என்று சரவணன் மலேசியாகினியிடம் கூறினார்.

தனது அமைச்சின் ஈடுபாட்டைப் பற்றிய விவரங்களை அறிய விரும்பினால், சாலமன் தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் துறை தலைமை இயக்குநர் சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.