நாமதி | இவ்வாண்டு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பிகேபி) தைப்பூசக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கெடாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த தைப்பூச நிகழ்வு விடுப்பை இரத்து செய்வதாக மாநில மந்திரி பெசார் முஹமட் சனுசி கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
பிகேபி-யின் போது கொண்டாட்டங்கள் இல்லாததால், விடுப்பு தேவையில்லை என்ற அவரின் அந்த அறிவிப்பு, மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலரின் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளானது.
முகநூல் பதிவுகளில், பல்லினம், மதம் சார்ந்த மலேசியர்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தைப்பூசத்திற்குக் கூட்டரசுப் பிரதேசமான கோலாலம்பூர் உட்பட, பினாங்கு, ஜொகூர், சிலாங்கூர், பேராக் போன்ற மாநிலங்களில் நிகழ்வு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களிலும் கொண்டாட்டத்திற்கான தடை இருந்தபோதிலும், அவை விடுப்பை இரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன், பினாங்கு துணை முதல்வர் I பி இராமசாமி இருவரையும் தொடர்ந்து, கெடா மந்திரி பெசாரின் முடிவுக்கு அறிக்கைவிட்ட சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் இயக்கத் தலைவர்களின் கருத்துகள் நமது பார்வைக்கு.
நஜிப் ரசாக், முன்னாள் பிரதமர்
மலேசிய இந்தியர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். பல வருடங்களாக, சில மாநிலங்கள் இந்த விழாவை விடுமுறை நாளாக அறிவித்துள்ளன என முன்னாள் பிரதமரும் பெக்கான் எம்.பி.யுமான நஜிப் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு தைப்பூச விழா பிகேபி-யால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், விடுமுறையை இரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்தியக் குடும்பங்கள் இந்நாளை அவரவர் வீடுகளில் கொண்டாடலாம்.
“நாம் இந்தப் பாரம்பரியத்தை வைத்திருக்கிறோம், 1மலேசியா பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைபிடிப்போம்,” என்று நஜிப் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
சேவியர் ஜெயக்குமார், கோலா லங்காட் எம்.பி
கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், கெடா மந்திரி பெசாரின் அறிக்கை மலேசிய இந்து சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று விவரித்தார்.
மாநில அரசை வழிநடத்துவதில் பாஸ் தலைவரின் திறமையின்மையை இது நிரூபிக்கிறது என்றார்.
“முஹம்மது சனுசி, நீங்கள் உண்மையில் திறமையற்றவர், சர்ச்சை இல்லாமல் ஒரு மாநில அரசாங்கத்தை வழிநடத்த முடியாது என்பதை நீங்கள் பலமுறை காட்டியுள்ளீர்கள்.
“ஊர்வலங்கள் அல்லது கொண்டாட்டங்கள் இல்லாதபோதிலும், அவரவர் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்,” என சேவியர் தெரிவித்தார்.
நூரின் ஐனா, மெர்போக் எம்.பி.
இந்த ஆண்டும், தைப்பூசத்திற்காக மாநில அரசு நிகழ்வு விடுப்பு அளிப்பதால் எந்த இழப்பும் ஏற்படாது என்று மெர்போக் நாடாளுமன்ற உறுப்பினர் நூரின் ஐனா கூறினார்.
பண்டிகைகளுக்கான விடுமுறைகள் பாரம்பரியமாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
“விடுப்பு வழங்குவது கலாச்சாரப் பரிமாற்றத்திற்கு ஓர் அஞ்சலி, விடுப்பில் அனைவரும் வீட்டிலேயேப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அக்மல் நசீர், பி.கே.ஆர் இளைஞர் தலைவர்
பி.கே.ஆர். இளைஞர் (எ.எம்.கே.) பிரிவுத் தலைவர் அக்மல் நசீர், மலேசிய மக்களின் பன்முகத்தன்மை உணர்வை உருவாக்க சனுசி தவறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
“ஜனவரி 28-ம் தேதி, ‘பண்டிகை இல்லை, அதனால் விடுமுறை இல்லை’ என்று வெளிப்படையாக கெடா மந்திரி பெசார் கூறியது அவரின் ஆணவத்தன்மையைக் காட்டுகிறது,” என்று எ.எம்.கே. விமர்சித்துள்ளது.
மலாய்-முஸ்லிம்களின் பால், ஒரு மோசமான தோற்றத்தை இது உருவாக்கியுள்ளது என்ற அக்மால், உண்மையில் இஸ்லாம் எந்தவோர் இனத்திற்கும் பாகுபாடு காட்டவில்லை என்றார்.
அஃப்நான் ஹமிமி, கெடா எம்.பி.யின் அரசியல் செயலாலர்
கெடா மந்திரி பெசாரின் அரசியல் செயலாளரான அஃப்நான் ஹமிமி தைப் அஜமுட்டின், தனது முதலாளியைத் தற்காத்து பேசியுள்ளார்.
தற்போது பிகேபி அமலாக்கத்தால், ‘விடுமுறையில்’ இருப்பது போலவே உள்ளதால், தனியொரு தைப்பூச விடுப்பு தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நிகழ்வு விடுப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதற்கு மாநில அரசு கூட்டத்தில் ஒப்புதல் தேவைப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.
அப்துல் ரஹ்மான், கியூபாக்ஸ் தலைமைச் செயலாளர்
பொது சேவை பணியாளர்கள் சங்கத்தின் (கியூபாக்ஸ்) தலைமைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் மொஹமட் நோர்டின், வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுப்புக்குக் கால அவகாசம் இல்லை என்றார்.
எனவே, கெடாவில் மக்களுக்குத் தைப்பூச நிகழ்வு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அப்துல் ரஹ்மான் கருதுகிறார்.
“ஏனென்றால், அது ஒரு விடுமுறை நாள். வீட்டிலிருந்து வேலை செய்வதால், விடுப்பு தேவையில்லை என்று பொருள்படாது.
“அது இந்துக்களின் உரிமை, இந்து அரசு ஊழியர்கள் விடுப்பெடுத்து, அவர்கள் மதம் சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாட அவரகளுக்கு உரிமை உண்டு,” என்றார்.
என் பாலசுப்பிரமணியம், பாஸ் ஆதரவாளர்கள் அமைப்பின் தலைவர்
“நிகழ்வு விடுப்பை அறிவிப்பது மந்திரி பெசாரின் அதிகாரம் என்றாலும், முந்தைய முடிவை அவர் மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன்,” என்று பாஸ் ஆதரவாளர்கள் அமைப்பின் தலைவர் என் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு நடவடிக்கை என்பதால், மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் எனக் கெடா மந்திரி பெசாரைப் பாஸ் ஆதரவாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“விடுப்பு இரத்து செய்யப்படுவது பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசாங்கத்திற்கு எதிர்மறையான பார்வையை அளிக்கும்,” என்றும் அவர் கூறினார்.
இப்படி பலவாறான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், தனது முடிவினில் மாற்றமில்லை என்று சனுசி கூறியுள்ளார்.
நிகழ்வு விடுப்பு என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதனால், மந்திரி பெசாருக்கு அதில் முடுவெடுக்கும் முழு அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“வேண்டுமானால் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து, நாடு முழுவதும் தைப்பூசக் கொண்டாட்டத்திற்குப் பொது விடுமுறை விடச்சொல்லி கோரிக்கை வையுங்கள்,” என்றும், நேற்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ம.இ.கா.விற்குச் சவால் விடுத்துள்ளார்.