கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி மொஹமட் நோரின் கூற்றுப்படி, “கடந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர” மாநிலத்தில் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு விடுமுறை இல்லை.
அதன் அரசியல் செயலாளர் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுடின், ஒரு முகநூல் பதிவில், தைப்பூசத் தினத்திற்கு 2017-ம் ஆண்டு தொடங்கியே, கெடாவில் நிகழ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டதாகக் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இது முந்தைய ஆண்டுகளில் நடக்கவில்லை.
ஓர் ஆங்கிலச் செய்தி தளமும் அதன் உண்மை மதிப்பாய்வில், தைப்பூசம் 2017- ஆம் ஆண்டு முதலே, கெடாவில் ஒரு நிகழ்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாகவும், முந்தைய ஆண்டுகளில் அது விடுமுறை தினமாக குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
இருப்பினும், தைப்பூசத்திற்கு 2014 முதல் கெடாவில் நிகழ்வு விடுமுறையாக இருந்துள்ளது.
இது அப்போதைய மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரால் அறிவிக்கப்பட்டு, மறைந்த துவாங்கு அப்துல் ஹலீம் முஅத்ஸாம் ஷாவின் ஒப்புதலைப் பெற்றது.
2013-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, பாஸ் மற்றும் பக்காத்தான் ரக்யாட்டிடம் இருந்து கெடாவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில், பாரிசான் நேஷனல் வழங்கிய வாக்குறுதியாகும்.
2014 தொடங்கி, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் கெடாவில், தைப்பூசத்திற்கு நிகழ்வு விடுமுறை தொடர்கிறது.
2020-ம் ஆண்டில், தைப்பூசம் சனிக்கிழமையன்று வந்ததால் நிகழ்வு விடுப்பு அறிவிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு, தைப்பூசம் அடுத்த வாரம் ஜனவரி 28, வியாழக்கிழமை வருகிறது.
முன்னதாக, இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி. 2.0) அமல்படுத்தியதைத் தொடர்ந்து தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிக்கப் போவதில்லை என்று மாநில அரசு முடிவு செய்துள்ளதாக சனுசி கூறினார்.
இருப்பினும், செந்தர இயங்குதல் நடைமுறைகளைக் (எஸ்ஓபி) கடைப்பிடித்து, இந்நாளைக் கொண்டாடலாம் என்றார்.
கோயில் வழிபாட்டு விழாக்கள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் வருகை இடத்தின் அளவுக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுமே.
காவடி ஊர்வலங்கள் அனுமதிக்கப்படவில்லை.