கோவிட் -19 நோயாளி தற்கொலை – மனச்சோர்வு காரணமாக இருக்கலாம்

கோவிட் -19 தொற்றினால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் முதியவர் ஒருவர், ஶ்ரீ கெம்பாங்கன், பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அவரது வீட்டில் நேற்று இறந்து கிடந்தார்.

செர்டாங் மாவட்டக் குற்றவியல் புலனாய்வு பிரிவு தலைவர், மொஹமட் அக்மல்ரிசல் ராட்ஸி கூறுகையில், 66 வயதான பாதிக்கப்பட்டவர், ஜனவரி 7 மற்றும் 18 ஆகியத் தேதிகளில், இரண்டு கோவிட் -19 திரையிடல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், அவரது இரண்டு முடிவுகளுமே நேர்மறையானதாக வந்துள்ளன.

“ஜனவரி 22-ம் தேதி, பாதிக்கப்பட்டவர், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, RM40,000-ஐ வழங்க விரும்பி, பப்ளிக் வங்கிக்குச் செல்ல வேண்டும் என்று தனது மனைவியை அழைத்திருக்கிறார்.

“அவரது மனைவியின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் அடிக்கடி வலியைப் பற்றி புகார் செய்துள்ளார், மேலும் கோவிட் -19 நேர்மறையானதாக உறுதி செய்யப்பட்டபோது, மனச்சோர்வடைந்த நிலையில் இருந்துள்ளார்.

“மேலும், தனது மனைவியிடம் இதுபோன்று நோய்வாய்ப்பட்டிருப்பதை விட இறப்பது நல்லது என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்,” என்று காவல்துறை அதிகாரிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மொஹட் அக்மல்ரிசல் கூறுகையில், சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணையில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் கிடைக்கவில்லை, மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

“இந்த வழக்கு திடீர் மரணம் எனத் தற்போதைக்கு முடிவு செய்யப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

நீங்கள் மனச்சோர்வு அடைந்திருந்தால், தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென தோன்றினால், அல்லது அப்படி யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால், https://www.befrienders.org.my/ என்ற இணையதளத்தில் உள்ள வழிகளைப் பின்பற்றி, உதவிக்கு நீங்கள் ‘பிஃப்ரென்டர்ஸ்’-ஐத் (Befrienders) தொடர்பு கொள்ளலாம்.

கோவிட் -19 தொற்றால் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டுள்ள முனைமுகப் பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் உதவும் நோக்கில், சுகாதார அமைச்சும் மெர்சி மலேசியாவும் (Mercy Malaysia) ஒரு உளவியல் சமூக உதவியலையை அமைத்துள்ளன.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில், 011-63996482, 011-63994236 அல்லது 03-9359935 என்ற எண்ணில் அவர்களை அணுகலாம்.