கஞ்சா இலைகளுடன் இணைந்த கட்சி சின்னம் : ஃபாஹ்மி ரேஸா-ஐ அர்மடா கண்டிக்கிறது

கஞ்சா இலை படத்துடன், பெர்சத்து கட்சி சின்னத்தை இணைத்து உருவாக்கிய உருவடிவத்தைச், சமூக ஊடகங்களில் பதிவேற்றிய, ஆர்வலர் மற்றும் வரைகலை வடிவமைப்பாளர் ஃபஹ்மி ரேஸாவின் நடவடிக்கையைப் பெர்சத்து இளைஞர் பிரிவு (அர்மடா) கண்டித்துள்ளது.

பெர்சத்து உறுப்பினர்களில் ஒருவர், நேற்று அதிக அளவிலானப் போதைப்பொருள் வைத்திருந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உருவடிவம் வெளியானது.

“கட்சியின் சின்னத்தைக் கெடுத்த ஃபாஹ்மி ரெஸாவின் நடவடிக்கைகளைப் பெமுடா பெர்சத்து கண்டிக்கிறது.

“எந்தவொரு குற்றச் செயலையும் அல்லது போதைப்பொருளையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் அர்மடா குறிப்பிட விரும்புகிறது.

“எனவே, கட்சியைக் களங்கப்படுத்தவோ அல்லது பிரச்சாரக் கருவியாக #ARMADADAH என்ற ஹேஷ்டேக்-கைப் பயன்படுத்தவோ வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அக்கட்சி பிரிவு முகநூலில் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் ஒரு சாதாரண உறுப்பினர் என்றும், அவர் கட்சித் தலைவர் அல்ல என்றும் அர்மடா ஒரு தனி குறிப்பில் வலியுறுத்தியுள்ளது.

எனவே, அவர் பெர்சத்து கட்சியின் தலைவர், அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஊடகச் செய்திகளையும் அர்மடா விமர்சித்தது.

இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதால், பெயர் குறிப்பிட வேண்டாம் எனக் கூறி மலேசியாகினியுடன் பேசிய காவல்துறை வட்டாரம் ஒன்று, 1.5 கிலோ உலர்ந்த கஞ்சா இலைகள், ஒன்பது கஞ்சா செடிகள் மற்றும் போதைப்பொருள் கலந்தது என நம்பப்படும் பெரிய அளவிலான திரவத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை பிற்பகலில், கோலாலம்பூர், ஃப்ரேசர் பிசினஸ் பார்க்-இல், 35 வயது சந்தேக நபரைச் சட்டவிரோதப் பொருட்கள் வைத்திருந்ததற்காகக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய தினம் சிலாங்கூர், அம்பாங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

“சோதனையின்போது, ​​ஏழு கஞ்சா செடிகள் மற்றும் இரண்டு கஞ்சா மரக்கன்றுகளையும், கஞ்சா சாறு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல புட்டிகளும் காவல்துறை கண்டுபிடித்தது.

“பல நெகிழிப் பைகளிலும் கொள்கலன்களிலும், உலர்ந்த கஞ்சா இலைகளையும் நாங்கள் கண்டறிந்தோம்,” என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.

கைப்பற்றப்பட்ட பொருள்கள், சுமார் RM60,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் மனைவி, 34, மற்றும் தம்பதியரின் பணிப்பெண் எனச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரையும் காவல்துரையினர் கைது செய்தனர்.

மூவரும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனையை விதிக்கப்படும்.

அவர் மீது குற்றம் சாட்டப்படாத வரை, கேள்விக்குரிய அந்நபரின் பெயரை மலேசியாகினி வெளியிடாது. அவர் இன்னும் ஒரு சந்தேக நபர் மட்டுமே, அவர் எந்த அரசாங்கப் பதவிகளையும் வகிக்கவில்லை.

பெர்சத்து கட்சியில் வாக்களிக்கப்பட்டு வென்ற எந்தப் பதவிகளையும் சந்தேக நபர் வகிக்கவில்லை. அவர் அர்மடா பணியகத்தில் நியமிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் மட்டுமே.

2018 பொதுத் தேர்தலில், ​​பேராக் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் பெர்சத்து கட்சியின் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

பெர்சத்து கட்சியுடன் தொடர்புடைய நபர்கள், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுக்காக விசாரிக்கப்படுவது இது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு ஜனவரியில், கோலாலம்பூரில் நடந்த போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் ஆடிஃப் சியான் அப்துல்லாவும் ஒருவர்.

ஆரம்பத்தில், காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் கூறுகையில், சட்டவிரோதப் போதைப்பொருட்களுக்குச் சாதகமான சோதனைக்குப் பின்னர் 16 (17 பேரில்) பேர் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கைது செய்யப்பட்டனர். கெத்தாமின் மற்றும் கஞ்சா வகை போதைபொருள்கள் அங்கு காணப்பட்டன என்றார்.

இரண்டு மாதங்கள் கழித்து, அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு, ஆடிஃப்பின் நோயியல் அறிக்கையில், அவரது சிறுநீர் பரிசோதனை சுத்தமாக இருப்பதாகவும், அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டது, “மேற்கொண்டு நடவடிக்கை இல்லை” (NFA) என வகைப்படுத்தப்படுவதாக சட்டத்துறை தலைவர் இலாகா உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.