முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது (பி.கே.பி.) நடந்ததைப் போல இப்போதும், அரசாங்கம் கடன் தடையைத் தானாகச் செயல்படுத்த வேண்டும் என்று 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருதுகின்றனர்.
தற்போதைய பி.கே.பி. 2.0 செயல்பாட்டின் தாக்கத்தால், பொதுமக்களிடையேயான விரக்தியைப் போக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அவர்கள் கூறினர்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளும் (எஸ்.எம்.இ.), பாதிக்கப்படாத பிற தரப்பினரும் வழக்கம்போல கடன்களைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர்.
“ஆறு மாதங்களுக்குத் தானாக ஒரு தடையை வெளியிடுவது, பொருளாதாரத் துறையின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும், மேலும் அதன் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2021 வரவுசெலவுத் திட்ட விவாதத்திற்கு முன்னதாக, விரிவான மற்றும் தானியங்கி தடை விதிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியைத் தவிர, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அம்னோவும் இதனையே வலியுறுத்தியது.
இருப்பினும், ஜனவரி 12-ம் தேதி, புத்ராஜெயா அவசரகால நிலையை அறிவித்தது மற்றும் பி.கே.பி, 2.0 அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்கோரிக்கை செயல்படுத்தப்படவில்லை.
ஜனவரி 18-ம் தேதி பிரதமர் முஹைடின் யாசின் அறிவித்த மலேசியப் பொருளாதார மற்றும் மக்கள் பாதுகாப்பு (பெர்மாய்) உதவித் தொகுப்பும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றது. காரணம், அது முந்தைய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதையே மீண்டும் செய்யும் அல்லது மேம்படுத்தும் நடவடிக்கை மட்டுமே எனக் கருதப்படுகிறது.
ஆட்சேர்ப்பை ஊக்குவிக்கவும்
எதிர்க்கட்சியின் கூற்றுப்படி, RM4,000-க்கும் குறைவான வருமானம் உள்ள நபர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்ஸோ) ஊதிய மானிய விகிதம் RM600-ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்.
“இப்போது கொடுக்கப்பட்டுள்ள மாதத்திற்கு RM600-ன் மொத்த மானியம் பி.கே.பி. 2.0 மற்றும் பல துறைகளில் அதன் தாக்கத்தைக் காட்டும் அவசரநிலைகளை எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லை.
“ஆறு மாத ஊதிய மானியம், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக்கூடாது என்று முதலாளிகளை ஊக்குவிப்பதோடு, குறைந்துவரும் விற்பனை மற்றும் பணப்புழக்கத்திலிருந்து அரை வருடம் தாக்குப்பிடிக்க அவர்களுக்கு உதவும்.
“இன்னும் சிலருக்கு, இது மீண்டும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும் தூண்டக்கூடும்,” என்று அவர்கள் கூறினர்.
இப்போது அசாதாரண நேரத்தை எதிர்கொள்ள, வேலைவாய்ப்பு துறையைக் காப்பாற்ற அரசாங்கம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பலவீனம், திறமையின்மை மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கானப் போட்டியில் தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆசிய நாடுகளிடம் உண்மையில் தோற்று போனது,” என்று அவர்கள் கூறினர்.
இந்த அறிக்கைக்கு, எம் குலசேகரன் (ஈப்போ பாராட்), ஆர் சிவராசா ராசையா (சுங்கை பூலோ), டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் (கோல சிலாங்கூர்), திரேசா கோக் (செபூத்தே), சலாஹுடின் ஆயூப் (பூலாய்), ஹான்னா இயோ (செகாம்புட்), சைட் சடிக் (மூவார்), தியோ நி சிங் (கூலாய்), பி பிரபாகரன் (பத்து), மரியா சின் (பெட்டாலிங் ஜெயா), கஸ்தூரி இராணி பட்டு (பத்து காவான்) உட்பட 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.