எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் அவசரகாலத் திட்டத்தை நிராகரிக்க ஒப்புக்கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை, “போதுமானதை விட அதிகமாக” இருப்பதாக இன்று கூறினார்.
இதுவரை, 114 முதல் 115 எம்.பி.க்கள் வரை அவசரகாலத்தை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக அன்வர் கூறினார்.
இந்தத் தீர்மானத்தைப் பரிசீலித்து, உடனடியாக ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்ட அழைப்புக்கு, மாட்சி தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் ஒப்புதல் பெற, இந்தத் தொகை போதுமானது என்று பி.கே.ஆர். தலைவர் மேலும் கூறினார்.
“இது இப்போது, பி.என்.-இன் தீர்மானத்தை நிராகரிக்க 114 (அல்லது) 115-ஐ எட்டியுள்ளது. அவசரநிலை குறித்த பி.என். கருத்துக்களை நிராகரிக்க அந்த எண்ணிக்கை போதுமானது, (அது) பெரும்பான்மையான எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு நிகழ்ச்சியில் கூறினார் .
கடந்த புதன்கிழமை, அவசரக்காலத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அனுமதிக்க, மாமன்னரின் ஒப்புதலைக் கோருவதற்காக ஒரு கடிதம் எழுதிய எதிர்க்கட்சியின் நடவடிக்கையை அன்வர் ஆதரித்தார்.
ஜனவரி 14-ம் தேதி, அவசரகால அறிவிப்பை இரத்துசெய்து, ஜனவரி 31-ம் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்ட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து மாமன்னருக்குக் கடிதம் அனுப்ப அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அன்வார் கேட்டுக்கொண்டார்.
பக்காத்தான் ஹராப்பானும் பெஜுவாங்’கும் கடிதம் அனுப்பியதை உறுதிப்படுத்தினர், அதே நேரத்தில் அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான், அதற்கு ஒப்புதல் கோரி கட்சியின் எம்.பி.க்களுக்குக் கடிதம் அனுப்பினார்.
அரசாங்கத்தாலும் எதிர்க்கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்ட அவசரகால அறிவிப்பு, பி.என். பரிந்துரைத்தபடி நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பையும் இடைநிறுத்த வழிவகுத்தது.