தைப்பூசத் திருவிழாவையொட்டி, முருகக் கடவுளின் திருவுருவச் சிலையை ஏற்றிச் செல்லும் தேர் ஊர்வலத்திற்குத், தேசியப் பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்வார் மூசா அறிவித்தார்.
முருகக் கடவுளின் சிலையை, ஜாலான் பண்டார் கோயிலில் இருந்து, பத்துமலை குகைக் கோயிலுக்கு ஏற்றிச் செல்லும் தேர் ஊர்வலம், ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் என்றும், ஜனவரி 29-ம் தேதி, அங்கிருந்து மீண்டும் ஜாலான் பண்டார் கோயிலுக்குத் திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அதற்கான நிபந்தனைகளைப் பின்பற்றி, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்குக் கட்டாயம் இணங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நிபந்தனைகள் என்னவென்றால், தேரை எங்கும் நிறுத்த முடியாது, 10-க்கும் மேற்பட்டவர்கள் தேரைப் பின்தொடர முடியாது, இசை அல்லது பாடல் ஒலிபரப்பப்படக்கூடாது,” என்று அவர் நேற்று தனது அதிகாரப்பூர்வக் கீச்சகத்தில் தெரிவித்தார்.
- பெர்னாமா