யூரோச்சேம் உறுப்பினர்களுக்கு அறிவிப்பு : தொற்றின் எண்ணிக்கை  குறையவில்லை என்றால் முழு பொருளாதார அடைப்பு

மலேசியாவில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், பிப்ரவரி 4-க்குப் பிறகு, ஒரு விரிவான பொருளாதார அடைப்பை அறிவிக்க அரசாங்கம் விரும்புகிறது என்று, ஐரோப்பிய-மலேசியா வர்த்தகத் துறையின் (யூரோச்சேம் மலேசியா) தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வென் ஷ்னைடர் அதன் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

மலேசியாகினி தொடர்பு கொண்ட ஒரு யூரோச்சேம் ஆதாரம், கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது, ஆனால் அது அதன் உறுப்பினர்களிடையே மட்டுமே பகிரப்படுவதாகக் கூறியது.

அந்தக் கடிதத்தில், ஷ்னைடர் மற்றும் சர்வதேச, வெளிநாட்டு வர்த்தக அமைச்சின் (மிட்டி) தலைமைச் செயலாளர், லோக்மன் ஹக்கீம் அலி மற்றும் பிற அதிகாரிகளுக்கு இடையில், கடந்த ஜனவரி 22 அன்று நடந்த, “முக்கியமான மற்றும் உடனடி” சந்திப்பின் சுருக்கம் இருந்தது, மேலும் அதில், சுகாதார அமைச்சு “பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மூடல் தொடர்பாக, ஒரு தெளிவான நிலைப்பாட்டைக் கூறியுள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தொற்று வீதம் குறையவில்லை என்றால், பிப்ரவரி 4-க்குப் பிறகு, கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அறிவிக்கும்.

“நாங்கள் எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமை இதுதான், உள்ளூர் அல்லது வெளிநாட்டினராக இருந்தாலும், பொருளாதாரத்தைத் தொடர்ந்து இயங்க வைக்க, தொற்றுநோய்களைக் குறைப்பதற்கும், அதன் தொடர்ச்சியை உடைப்பதற்குமான முயற்சிகளில் பங்கேற்குமாறு மிட்டி அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறது,” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 99 திரளைகளை உருவாக்கிய, உற்பத்தித் துறைகளே அதிகத் தொற்றுநோய்க்கு முக்கியக் காரணம் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது என்று ஷ்னைடர் கூறினார்.

“(துறை) கட்டுமானமும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அது மிட்டியின் பார்வையின் கீழ் இல்லாததால், நாங்கள் அதைப் பற்றி விரிவாக விவாதிக்கவில்லை.

“பணியாளர் தங்குமிடங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய நடவடிக்கைகள் (போக்குவரத்து, சமூக நடவடிக்கைகள்) முதன்மையாக சிக்கல்களாக அடையாளம் காணப்படுவதால், உற்பத்தி தளங்களே இந்தத் தொற்று அதிகரிப்புக்குக் காரணமாகத் தெரிகிறது, எனவே மிட்டி மற்றும் வர்த்தக சபையுடன் இணைந்து எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்கிறது.

“நாங்கள் அமைச்சின் கூடுதல் தகவலுக்காகக் காத்திருக்கிறோம், நேரம் மிகவும் முக்கியமானது என்பதால், ஆரம்ப முடிவுகளை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்கும் தங்குமிடத்தை நிர்வகிக்கவும் ஒழுங்குபடுத்தவும் நிறுவனம் குறைந்தபட்சம் ஒரு மனிதவள பிரதிநிதியையாவது நியமிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதம் பரிந்துரைத்தது.

ஷ்னைடரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டவைக் குறித்து மலேசியாகினி மிட்டி மற்றும் சுகாதார அமைச்சிடமிருந்து கருத்துகளைப் பெற முயற்சிக்கிறது.