கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, பெந்தோங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில், ஜி ஜெஸ்துஸ் கெவின்’னின் மரணத்தில் தொடர்புடையவர்களைச் சுவாராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கண்டித்தார்.
இந்தப் பிரச்சினையில், காவல்துறை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளது எனும் குற்றச்சாட்டுகள், காவல்துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தின் (ஐபிசிஎம்சி) தேவையைச் சுட்டிக்காட்டுகின்றன என்றார் அவர்.
“ஜி ஜெஸ்துஸ் கெவின் மரணம் தொடர்பாக, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நடத்திய ஆய்வின் முடிவுகள், கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, கைதி இறந்து போனது பயங்கரமான ஒரு சம்பவம் எனக் கூறுகின்றன.
“சுஹாகாம் அறிக்கையின் விசாரணை அடிப்படையில், ஜெஸ்துஸ் கெவின் விசித்திரமாகக் காட்சியளித்தார், தற்கொலைக்கு முயன்றார் என்பதனால், அவரைக் கட்டுப்படுத்தும்படி மற்ற கைதிகளுக்குக் காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.
“கைதிகளின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வார்கள் என நாம் நம்பும் காவல்துறையினர், அக்கைதிகளைக் கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் கட்டுப்படுத்த, சட்டவிரோதமாக தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு வருத்தமளிக்கிறது,” என்று சிவன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் திருட்டுக் குற்றத்திற்காக, சந்தேகத்தின் பேரில் ஜெஸ்துஸைக் கைது செய்ததாக சுஹாகாம் கண்டறிந்துள்ளது, ஆனால் பயங்கர அடியின் காரணமாக மூளை வீக்கம் ஏற்பட்டு அவர் இறந்தார்.
“ஒரு காவல்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், அவரை இரண்டு கைதிகள் தாக்கியுள்ளனர். தடயவியல் மருத்துவர் இறந்தவர் விலா எலும்பு உட்பட பல காயங்களுக்கு ஆளானதை உறுதிப்படுத்தினார்.
“சிறைக்கட்டறையில் இருந்த மற்ற கைதிகள், இறந்தவர் ஒரு போர்வையுடன் கட்டப்பட்டதாகவும், மற்ற கைதிகளால் தாக்கப்பட்டதாகவும் கூறினர், இதனை சிசிடிவி காட்சிகளும் உறுதிப்படுத்தின,” என்று சுஹாகாம் ஆணையர் ஜெரால்ட் ஜோசப் கடந்த வாரம், ஓர் இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“அனைத்து கைதிகளும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும், கைதிகளின் பாதுகாப்பிற்கு எல்லா நேரங்களிலும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்” என்று ஐக்கிய நாடுகளின் கைதிகளுக்கான குறைந்தபட்ச விதிகள் தெளிவாகக் கூறுகின்றன.
இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது, இது ஒரு புதிய அல்லது தனித்துவமான வழக்கு அல்ல என்று சுவாராம் வலியுறுத்தியது.
மலேசியாவில் கைதிகள் இறக்கும் வரலாறு நீண்ட காலமாக தொடரும் ஒரு சம்பவம் ஆகும். ஆனால் எந்தவொரு சம்பவமும் தண்டனைக்கு வழிவகுக்கவில்லை, காவல்துறையினரே வழக்கை மூடிவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இது வழிவகுத்தது.
“இதுபோன்ற சம்பவங்களின் காரணமாக, ஐபிசிஎம்சி போன்ற காவல்துறையினரின் தவறான நடத்தைகளை விசாரிக்கக்கூடிய ஒரு சுயாதீனமான மற்றும் சார்பற்ற அமைப்பு அவசரத் தேவையாகி போனது.
“இரண்டு வாரங்களுக்கு முன்பு, மிரியில், ஒரு காவல்நிலையச் சிறைக்கட்டறையில் இருந்தபோது ஒரு சிறுமி, சக கைதியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மலேசியர்களை அதிர்ச்சியடைய வைத்தது,” என்று அவர் கூறினார்.
இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளால், பல ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டு வரும் காவல்துறை முறைகேடு தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் என்று சிவன் விளக்கினார்.