15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) அவரை ஆதரிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை உட்பட, ம.இ.கா. தலைவரின் அறிக்கைகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, முக்ரிஸ் மகாதீருக்குப் பதிலாக, மாநில அரசை ஆட்சி செய்யத் தொடங்கிய சனுசி, கடந்த ஜிஇ14-இன் போதுகூட அவர்கள் பாஸ்-ஐ ஆதரிக்கவில்லை என்று கூறினார்.
ம.இ.கா. கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பக்காத்தான் ஹராப்பானை (பி.எச்.) ஆதரித்ததாக அவர் கூறினார்.
“உண்மை என்னவென்றால், ம.இ.கா.-வுக்கு இந்தியரல்லாதவர்களிடமிருந்து வாக்குகள் தேவை,” என்று அவர் கூறியதாக, இன்று பெரித்தா ஹரியான் இயங்கலை செய்தித் தளம் மேற்கோளிட்டுள்ளது.
சனுசி ஓர் அனுபவமற்ற தலைவர் என்றும் பிற இனங்களுடன் ‘பழகும்’ திறனைக் கொண்டிருக்கவில்லை என்றும் வர்ணித்த ம.இ.கா. தலைவர் எஸ். விக்னேஸ்வரனின் அறிக்கையைத் தொடர்ந்து சனுசி இவ்வாறு கூறினார்.
எனவே, அடுத்த ஜிஇ15-இல் சனுசிக்குத் தனது கட்சி ஆதரவளிக்காது என்று விக்னேஸ்வரன் எச்சரித்தார்.
கோவிட் -19 தொடர்பான தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து மாநிலத்தில் திருவிழாவிற்கு நிகழ்வு விடுமுறை இருக்காது என்று சனுசி அறிவித்ததை அடுத்து, கெடாவில் தைப்பூச விடுமுறை சர்ச்சைக்குரியதானது குறிப்பிடத்தக்கது.