அமானாவைச் சேர்ந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ம.இ.கா.வை பக்காத்தான் ஹராப்பானில் இணைந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
பாஸ் கட்சியைச் சார்ந்த, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி, மாநிலத் தைப்பூச நிகழ்வு விடுமுறையை இரத்து செய்த விவகாரம் தொடர்பில், டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர், முகமட் சோஃபி அப்துல் வாஹாப் இவ்வாறு கூறியுள்ளார்.
“ம.இ.கா.வை பி.எச்.-இல் வந்து சேர நான் அழைக்கிறேன், ஏனென்றால் இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து இனங்களுக்கும் எங்கள் பி.எச்.-இல் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
“[…] (ம.இ.கா. தலைவர்) எஸ். விக்னேஸ்வரன், அரசியல் போராட்டத்தில் மற்ற இனங்களையும் மதங்களையும் மதிக்காத மந்திரி பெசாரின் அணுகுமுறையை அறிந்திருப்பார், எனவே, ம.இ.கா. பி.எச்.சில் சேர வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
ம.இ.கா.-ஐ கூட்டணியில் ஏற்றுக்கொள்வதில் பி.எச். மகிழ்ச்சியடையும் என்றும் அவர் கூறினார்.
“அமானா இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், நாங்கள் எங்கள் போராட்டத்தின் அடித்தளத்தை ஒரு மதம் மற்றும் இனம் சார்ந்து நடத்தமாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.