பி.டி.பி.ஆர். : குவா முசாங் ஒராங் அஸ்லி மாணவர்கள் இன்னும் படிப்பைத் தொடங்கவில்லை

கிளாந்தானின் உட்புறக் கிராமப்புறங்களில் வாழும் சமூகத்திற்குப் பொருத்தமான கற்றல் முறைகளை அடையாளம் காண்பதில், ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (ஜாகோவா) மலேசியக் கல்வி அமைக்சுடன் இன்னும் விவாதித்து வருகிறது.

 

இவ்விவகாரத்தை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், இப்போதைக்கு – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) இன்னும் நடைமுறையில் இருக்கும்போது – சம்பந்தப்பட்ட ஒராங் அஸ்லி மாணவர்கள் இன்னும் பள்ளி அமர்வுகளைத் தொடங்கவில்லை என்றும் அதன் தலைமை இயக்குநர் டாக்டர் ஜூலி எடோ கூறினார்.

“பரிந்துரைகளில், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அச்சிடப்பட்ட உபகரணங்களை வழங்கி கற்றல் கற்பித்தலைத் தொடங்கலாம் என்பதும் அடங்கும்.

“பொருள் விநியோகம் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட விஷயங்களில் உதவ ஜாகோவா தயாராக உள்ளது,” என்று, இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

கோவிட் -19 தொற்றின் அச்சுறுத்தல் மற்றும் பி.கே.பி. அமலாகத்திற்கு இணங்க, முக்கியத் தேர்வுகளில் அமரும் மாணவர்கள் மட்டுமே நேருக்கு நேர் கற்றலைப் பின்பற்ற கல்வியமைச்சு அனுமதித்துள்ளது.

மற்ற மாணவர்கள் ஜனவரி 20 முதல் இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை (பி.டி.பி.ஆர்.) பின்பற்றி வருகின்றனர்.

இருப்பினும், பி.டி.பி.ஆர். செயல்முறை பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறது, குறிப்பாக கிராமப்புறங்கள் அல்லது வசதி குறைந்த மாணவர்களுக்கு.

குவா முசாங்கைச் சுற்றியுள்ள ஒராங் அஸ்லி குடியிருப்புகளில் இணைய வசதிகள் இல்லாததால், அம்மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

கல்வியமைச்சின் எந்தவொரு முடிவிற்கும், சிறந்த ஒத்துழைப்பை வழங்க ஜாகோவா முயற்சிக்கும் என்றார் ஜூலி.

விரிவான தீர்வுக்காகக் காத்திருக்கும் வேளையில், ​​ ஜாகோவா குவா முசாங் மாவட்டக் கல்வி இலாகாவுடன் ஒரு தற்காலிக வழியைக் கண்டுபிடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜூலி சொன்னார்.