போலி கோவிட் -19 திரையிடல் சீட்டுகள் – விசாரணைக்குக் கே.பி.ஜே., லேப்லிங்க் ஒத்துழைப்பு

கேபிஜே ஹெல்த்கேர் பெர்ஹாட்டும் (கேபிஜே), அக்குழுவின் நோயியல் ஆய்வகப் பிரிவு, லேப்லிங்க் (ம) சென். பெர்ஹாட்டும், போலி கோவிட் -19 திரையிடல் சீட்டுகளை விற்றது தொடர்பிலான கும்பலை விசாரிக்கும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளன.

நாட்டின் எல்லை தாண்டியப் பயணங்களுக்குப், போலி லேப்லிங்க் கடிதத்தாள்களில், கள்ள அல்லது பொய்யான கோவிட் -19 திரையிடல் முடிவுகளைக் கொண்ட அறிக்கைகள் வெளியாவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகக் கே.பி.ஜே. கூறியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“அவை மோசடி மற்றும் பொய்யான ஆவணங்கள் என்பதை, கேபிஜே-வும் லேப்லிங்க்-கும் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம், மேலும் இந்த ஆவணங்கள் அனைத்தும் லேப்லிங்கினால் வழங்கப்படவில்லை என்பதை உள் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

“நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக கருதுகின்றோம், மேலும் அதிகாரிகளின் விசாரணைகளை எளிதாக்க, அவர்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அக்குழுவினர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

“அனைத்து லேப்லிங்க் கோவிட் -19 சோதனைகளும் முறையான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நெறிமுறையில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் முடிவுகள் நோயாளிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவப்பட்ட மற்றும் தெளிவான நெறிமுறைகளின் அடிப்படையில் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் அனுப்பப்படுகின்றன,” என்று அது மேலும் கூறியுள்ளது.

நேர்மறையான முடிவுக்கு அஞ்சிய, நாடு திரும்ப விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, கேபிஜே மருத்துவமனை, லேப்லிங்க் அல்லது பிபி ஹெல்த்கேர் போலி திரையிடல் சீட்டுகளை RM300 வரையில் விற்றதாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் தேதி, கே.எல்.ஐ.ஏ. அனைத்துலக விமான நிலையப் பதிவு முகப்பில், சந்தேகத்திற்குரியக் கோவிட் -19 திரையிடல் முடிவுகளை வழங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலி லேப்லிங்க் சோதனை சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பெர்னாமா நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

28 மற்றும் 37 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் அதன் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து, சக நாட்டு மக்களை குறிவைத்து இந்தக் குழு தனது பணியை முடக்கியுள்ளது.

கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங்கில் வசிக்கும் 27 வயதான அவர்களது சூத்திரதாரி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜொகூர் பாரு, தாமான் தம்போய் இண்டாவில் உள்ள மற்றொருவரை, ஜொகூர் பாரு போலீசார் கைது செய்ததாக, கே.எல்.ஐ.ஏ. காவல்துறைத் தலைவர் இம்ரான் அப்துல் இரஹ்மான் தெரிவித்தார்.