ஒராங் அஸ்லி ‘வனக் கல்வி குடிசை’யில் இயங்கலை வகுப்புகள்

புகைப்படக் கட்டுரை | இயங்கலை வகுப்புகளுடன் இந்த மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், எல்லா இடங்களிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அவ்வகுப்புகளில் இணைவதை உறுதிசெய்யப் போராட வேண்டியிருக்கிறது. சிலருக்கு, இப்போராட்டம் என்பது, அடர்த்தியான எண்ணெய் பனை காடுகளால் சூழப்பட்ட ஒரு தனிமையான சாலையில், 15 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணமாகும்.

ஒவ்வொரு நாளும், ஜக்குன் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒராங் அஸ்லி குழந்தைகள், கம்போங் ஒராங் அஸ்லி கெமிடாக், பெக்கோக், ஜொகூரில் இருக்கும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, ஒரு தற்காலிக மரக் குடிசைக்குச் செல்கிறார்கள், இது ஓர் எண்ணெய் பனை தோட்டத்தின் நடுவில், துப்புரவு செய்யப்பட்ட ஓர் இடமாகும்.

தங்கள் குழந்தைகளுக்கு, ஒரு நல்ல இணைய இணைப்பைப் பெறக்கூடிய ஒரே இடம் அதுவென்பதால், பெற்றோர்கள் அங்கு அக்குடிசையை எழுப்பியுள்ளனர்.

மலேசியாகினி அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, ​​சுமார் 20 கம்போங் டுக்குங் மற்றும் பெக்கோக் சீனப் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன், தற்காலிக வெளிப்புற வகுப்பறையிலிருந்து மெய்நிகர் பாடங்களில் கலந்துகொண்டனர்.

குடிசையில் முறையான இணைய இணைப்பு, மாணவர்கள் கூகிள் சந்திப்பு (Google Meet) போன்ற தரவு-கனமான பயன்பாடுகளை அணுக அனுமதிக்கிறது, ஆனால் காட்டில் படிப்பது அவ்வளவு வசதியாக இருக்காது.

வானிலை கணிக்க முடியாதது, கொசுக்கள் ஆபத்தானவை மற்றும் காட்டு விலங்குகள் பாட நேரங்களைச் சீர்குலைக்கும் வாய்ப்பு எப்போதும் உள்ளது.

இப்படியான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், மெரினா ஜிதா தனது குழந்தைகளை மீண்டும் கல்வியைத் தொடங்க வலியுறுத்துகிறார்.

“என் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டும், என்னைப் போல இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.

“என் கையில் நான் எண்ணெய் பனை பழத்தை வைத்திருக்கிறேன், ஆனால் எதிர்காலத்தில் என் குழந்தை ஓர் அலுவலகத்தில், அதன் கைகளில் ஒரு பேனாவை வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது குழந்தை மற்ற ஒராங் அஸ்லி குழந்தைகளைப் போல சுற்றித்திரிவதைப் பார்க்க நான் விரும்பவில்லை,” என்று 36 வயதான அவர் கூறினார்.

பத்தொன்பது வயதான செகாமாட் யு.ஐ.டி.எம். மாணவி ஜரீனா ரம்லி, குடிசையில் இருக்கும்போது தனது பாடங்களில் கவனம் செலுத்துவது கடினம் என்று ஒப்புக்கொள்கிறார்.

“பலர் கேள்விகளைக் கேட்க விரும்புகிறார்கள், எனது விரிவுரையாளர் அனைவருக்கும் இயங்கலையில் பதிலளிப்பது கடினம். இதற்கு முன், நான் எனது விரிவுரையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களிடம் தனிப்பட்ட முறையில் எனது கேள்விகளைக் கேட்க முடியும்,” என்று கூறினார்.

 

கம்போங் ஒராங் அஸ்லி கெமிடாக் மாணவர்களுக்கு முறையான இணைய இணைப்பு என்பது எண்ணெய் பனை காட்டுக்குள், தனிமையான சாலை வழியாக 15 கி.மீ. பயணம் செய்தால் மட்டுமே கிட்டும்.

‘வனக் கல்வி குடிசை’க்குச் செல்ல, குழந்தைகள் பிரதான சாலையிலிருந்து, காட்டு வழியாக உருவாக்கிய ஒரு குறுகிய மலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஜொகூர், பெக்கோக்கில் உள்ள ஓர் எண்ணெய் பனை தோட்டத்தின் நடுவில் உள்ள குடிசை, கம்போங் ஒராங் அஸ்லி கெமிடாக் குழந்தைகள் இயங்கலை வகுப்புகளில் கலந்துகொள்ள போதுமான நல்ல இணைப்பைப் பெறக்கூடிய ஒரே இடம்.

கூகிள் சந்திப்பு போன்ற தரவு-கனமான பயன்பாடுகளைக் குழந்தைகள் பயன்படுத்த, இணைய இணைப்பு இங்கு வலுவானதாக உள்ளது.

குடிசையில் படிப்பது என்பது அன்றாட நடவடிக்கையாகிபோனதால், பெற்றோர் அங்கேயே உணவைத் தயாரிக்கிறார்கள்.