முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மத், சுகாதார அமைச்சின் முடிவுகளுக்கு டாக்டர் ஆதாம் பாபாவும் அவரது இரு துணைகளும் பொறுப்பேற்க வேண்டும் அல்லது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, திரைக்குப் பின்னால் பணியாற்றும் அமைச்சுகளின் நிபுணர்கள் கூறும் கூட்டுக் கருத்துக்களை அறிவிக்கும் ஒரு தூதர் மட்டுமே தான் என்று தெரிவித்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
நூர் ஹிஷாம் தான் ஒரு ‘தூதர்’ மட்டுமே என்று வலியுறுத்தியதால், அமைச்சின் முடிவுகளுக்குப் பின்னால் ஓர் அறிவியல் விளக்கம் இல்லை என்று பலர் குழப்பமடைந்துள்ளனர் என்றார் சுல்கிப்ளி.
“உடனடியாக நீங்கள் கேட்கிறீர்கள், இறுதி முடிவு (தீர்ப்பு அழைப்பு) இல்லாமல் இந்தப் பதிலுக்கு என்ன அடிப்படை என்று?
“மிக முக்கியமாக, கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலையைக் கையாள, அவசரநிலை அறிவிப்பு இல்லாமல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் (பி.கே.பி.) கடுமையாக்கினாலே போதுமானது என்ற பொது மக்களின் குற்றச்சாட்டை இது வெளிப்படுத்துகிறது மற்றும் நியாயப்படுத்துகிறது,” என மலேசியாகினியிடம் அவர் கூறினார்.
மலேசியா தனது அரசியல் தலைமையை இழந்துவிட்டதாகவும், கடந்த ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகம் அகற்றப்பட்டதிலிருந்து நாடு “கிட்டத்தட்ட தானாகவே” இயங்குவதாகவும் அவர் கூறினார்.
டாக்டர் ஆடாம் – அவரது துணைகள் டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் ஆரோன் ஆகோ டகாங் ஆகியோருடன் – சுகாதார அமைச்சின் அதிகாரத்துவத்தினருடனும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஒரு குழுவாகப் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“இருப்பினும், இறுதியில், நிர்வாகி – அமைச்சர் – எப்போதும் பொறுப்பேற்க வேண்டும், எல்லாவற்றிற்கும் அவர்தான் பொறுப்பு.
‘அந்த மூன்று பேர் எங்கே?’
“அதனால்தான், அமைச்சரும் அவரது இரண்டு துணைகளும், இப்போது ‘வெட்டி சம்பளத்தை எடுக்கிறார்கள்’ என்று மக்கள் கூறுகிறார்கள் …
“இதற்குக் காரணம் என்ன? ஏனென்றால் மக்கள் அவர்களின் தலைமையைப் பார்க்கவில்லை, அல்லது பிரச்சனைகளுக்கு அவர்கள் பொறுப்பேற்பதாகக் கருதவில்லை.
“எனக்குப் பிறகு, சுகாதாரத் தலைமை இயக்குநர்தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது, குறிப்பாக தினசரி பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதில்.
“‘இப்போது மூன்று பேர் உள்ளனர். அமைச்சரும் இரண்டு துணை அமைச்சர்களும், அவர்கள் எங்கே’ என்று மக்கள் கேட்கிறார்கள்?
“நிலைமை மோசமடைந்துள்ளது, சுகாதாரத் தலைமை இயக்குநரை மட்டும் குறிவைக்காது, அவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
“மக்கள் உங்களையும் காண வேண்டும், விமர்சனங்களுக்குப் பயப்பட வேண்டாம். மேலும் புகழ்ச்சிக்கு மட்டும் முயற்சிக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான கடமையை அவர்கள் நிறைவேற்றத் தவறினால், அவர்கள் இராஜினாமா செய்வதன் மூலமோ அல்லது தங்கள் பதவிகளைப் பிரதமரிடம் ஒப்படைப்பதன் மூலமோ அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பிரதமர் முடிவு செய்ய அனுமதிப்பதன் மூலமோ ‘நன்மை செய்ய வேண்டும்’ என்று சுல்கிப்ளி கூறினார்.
பொது மற்றும் தனியார் துறைகளில், சுகாதார அமைச்சுக்கு வெளியே உள்ள நிபுணர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும் சுல்கிப்ளி சுகாதார அமைச்சை வயுறுத்தினார்.
பிரதமர் முஹைதீன் யாசினுக்கு எழுதப்பட்ட திறந்த கடிதத்தில், வல்லுநர்கள் குழு சமர்ப்பித்த பல பரிந்துரைகளை அரசாங்கம் எடுத்துக்கொள்வது பொருத்தமானது என்று டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.
“சுகாதார அமைச்சில் மட்டுமல்லாமல், மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்க அமைச்சரும் சுகாதார அமைச்சும் தயாராக இருந்தால் மட்டுமே, தொற்றைத் துடைத்தொழிக்க நிறைய செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.