முகக்கவரி அணியவில்லை என்றக் குற்றச்சாட்டுக்குச் சரவணன் விளக்கம்

பத்துமலை கோயில் தைப்பூசத்தில் கலந்துகொண்ட மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணன், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்ஓபி) மீறியதாக, சமூக ஊடகங்களில் பலர் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், முகக்கவரி இல்லாத சரவணன் (முகக்கவரி கன்னத்தில் விழுந்துகிடந்தது), பத்துமலைக் கோயில் தலைவர் ஆர் நடராஜாவிடம் இருந்து மாலையைப் பெற்றுக்கொள்வதாகக் காணப்பட்டார்.

அதுமட்டுமின்றி, ஒரு நாதஸ்வரக் குழுவுடன் இணைந்துகொண்டு, கோயில் வளாகத்தில் சரவணன் நடந்து செல்வதாகவும் அதில் காணப்பட்டது.

கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ். லீயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானக் கோயிலின் தைப்பூசத் தேர் ஊர்வலத்தைக் காண ஆர்வமுள்ள இந்துக்கள், அதனை இயங்கலையில் மட்டுமே பார்க்குமாறு நடராஜா முன்பு கூறினார்.

கடந்த வாரம் முதல், தைப்பூசம் பொதுமக்கள் மத்தியில் கொண்டாடப்படுவதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு விஷயங்களில் கோயிலுக்கு உதவியதால், தான் அங்கு அழைக்கப்பட்டதாக சரவணன் எஃப்எம்டி செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

வருகையின் போது, அனைத்து எஸ்.ஓ.பி.க்களும் கடைப்பிடிக்கப்பட்டன என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“கலந்துகொள்ள எனக்கு காவல்துறை அனுமதி வழங்கியது. கோயில் குழுவினரின் வழிகாட்டுதல்களின்படி, வருகை தந்த அனைவருமே கடுமையான கோவிட் -19 எஸ்ஓபிகளைக் கடைப்பிடித்தனர். மேலும், வருகையாளர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு.

“முழுவதும் (வருகை) அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது,” என்ற அவர், அமைச்சரவையில் இந்து சங்கங்களின் பிரதிநிதி தான் என்றும் விளக்கினார்.

முன்னெச்சரிக்கையாக, அவ்விழாவில் அவர் தனது ஊழியர்களுடனோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ கலந்துகொள்ளவில்லை என்று கூறினார்.

மேலும் விளக்கிய சரவணன், ஒரு கணம் மட்டுமே முகக்கவரியைத் திறந்ததாகக் கூறினார்.

“மரியாதைக்குரிய அடையாளமாக (கோவில் நிர்வாகத்திற்கு) மாலை அணிவதற்கு ஒரு கணம் மட்டுமே முகக்கவரியை அகற்றினேன்.

“அதன் பிறகு, நான் அதனை அணிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், ம.இ.கா. துணைத் தலைவர் தன்னுடன் கோயில் இசைக்கலைஞர்கள் இருப்பது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல என்பதை ஒப்புக் கொண்டார்.

“அது என் கட்டுப்பாட்டில் இல்லை, ஏனென்றால் நான் வருவதற்கு முன்பே இசைக்கலைஞர்கள் அங்கு இருந்தார்கள்,” என்று அவர் கூறினார்.