மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட, பொருளாதாரச் செயல்பாட்டிற்கு மலேசியா முழு கட்டுப்பாட்டுத் தடைகளை விதிக்காது என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் உறுதியளித்தார்.
அதற்குப் பதிலாக, நாட்டில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், கடுமையான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அமல்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார்.
“தற்போதைய நிலைமையின் அடிப்படையில், பாதிப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
“மோசமான சூழ்நிலை ஏற்பட்டாலும், நாங்கள் பொருளாதாரச் செயல்பாடுகளில் முழு இயக்க கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மாட்டோம், கடுமையான எஸ்.ஓ.பி.க்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்,” என்று அவர் இன்று சிஎன்பிசி-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி. 2.0) நீட்டிக்கப்பட்டால் அல்லது கோவிட் -19 தடுப்பூசி சீராக வழங்கப்படாவிட்டால், அரசாங்கம் எந்தெந்தத் துறைகளை மூடும் அல்லது எந்தத் துறைகளை மூடுவதற்கு முன்னுரிமை அளிக்கும் என்ற கேள்விக்குத் தெங்கு ஜஃப்ருல் இவ்வாறு பதிலளித்தார்.
- பெர்னாமா