பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரை, மோட்டார் வாகன உரிமம் (எல்.கே.எம்.) மற்றும் ஓட்டுநர் தகுதி உரிமம் (சி.டி.எல்.) ஆகியவற்றைப் புதுப்பித்தல் தொடர்பில், அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது.
எவ்வாறாயினும், ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் காப்பீட்டுத் தொகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கோரப்பட்டால் போக்குவரத்து அமலாக்க உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு சான்றிதழின் நகலைக் காட்ட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
“எல்.கே.எம். மற்றும் சி.டி.எல். வைத்திருப்பவர்கள், வழங்கப்பட்ட விலக்கு காலம் முடிந்த 30 நாட்களுக்குள், தங்கள் உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும், இது 2021 ஏப்ரல் 30 வரை உள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பொது இடங்களில் நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்க இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று வீ கூறினார்.
இருப்பினும், வணிக வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழில் உரிம உரிமையாளர்களுக்கு (ஜி.டி.எல். மற்றும் பி.எஸ்.வி.) விதிவிலக்குகள் வழங்கப்படவில்லை, ஏனெனில் அவை தொடர்பான புதுப்பித்தல் சேவைகள் பி.கே.பி. காலத்தில் தேவையான சேவைகளாகச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
எல்.கே.எம். மற்றும் சி.டி.எல். புதுப்பிப்பதற்கான விலக்கு, கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் செப்டம்பர் 30 வரையில், பி.கே.பி. 1.0 காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.
விவேகமான ஓட்டுநர்களாக இருக்க வேண்டும் என்றும், பி.கே.பி. காலத்தில் எம்.கே.என். அமைத்த எஸ்ஓபி-களுக்கு இணங்க வேண்டும் என்றும் வீ நினைவூட்டினார்.
- பெர்னாமா