62 தன்னார்வலர்கள் இன்று கோவிட் -19 ஆய்வு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

தேர்ந்தெடுக்கப்பட்ட 62 தன்னார்வலர்கள், இன்று முதல் திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் முகநூல் பக்கத்தில் வெளியான ஓர் அறிக்கையின்படி, மலேசியாவில் முதல் கோவிட் -19 தடுப்பூசி ஆய்வு, சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் இன்று தொடங்கியது.

“62 ஆரோக்கியமான நபர்கள், தன்னார்வலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஊசி இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அட்டவணைப்படி நடைபெறும்,” என்று சுகாதார அமைச்சு கூறியது.

இந்த மூன்றாவது கட்ட மருத்துவ ஆய்வில், 3,000 தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி மலேசிய அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையில், சீனாவின் மருத்துவ உயிரியல், மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின்  (ஐஎம்பிசிஏஎம்எஸ்) வாயிலான ஒத்துழைப்பு ஆகும்.

SARS-CoV-2 தடுப்பூசியின் வளர்ச்சியில் அறிவியல் சான்றுகளை உருவாக்குவதில் இந்த ஆய்வு ஒரு பங்கை வகிக்க முடியும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

“சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை உட்பட, நாடு முழுவதும் மொத்தம் ஒன்பது மருத்துவமனைகள், சுகாதார அமைச்சின், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.சி.ஆர்.) ஒருங்கிணைப்பின் கீழ் மருத்துவப் பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளன.

“இந்த ஆய்வில் 13 மாதக் காலப்பகுதியில் 3,000 உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள்,” என்றும் சுகாதார அமைச்சு மேலும் கூறியது.