ரனாவ் மாவட்டக் காவல்துறை தலைமையகம் (ஐபிடி), இயங்கலை கற்றல் கற்பித்தலுக்கு (பிடிபிஆர்), அப்பகுதி மாணவர்கள் இணைய இணைப்பைப் பெற வசதியாக, ரானாவ், கம்போங் பாவுஸ்சில் உள்ள ஒரு மலையில், 100 மீட்டர் உயரத்தில் ஓர் இடத்தைச் சுத்தம் செய்து, கூடாரம் ஒன்றை அமைத்துள்ளது.
கிராமத்தில் நல்ல இணைய சமிக்ஞைகள் இல்லாததால், மாணவர்கள் பி.டி.பி.ஆர் அமர்வுகளில் கலந்துகொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, அவர்களுக்கு உதவும் வகையில், மலையில் அக்கூடாரத்தை அமைத்துள்ளதாக, ரானாவ் மாவட்டக் காவல்துறை தலைவர், டி.எஸ்.பி. சேம்மி நியூடன் தெரிவித்தார்.
எண்ணெய் பனை தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள அக்கூடாரம் கிராமத்திலுள்ள 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
“மேசை மற்றும் நாற்காலிகள் கொண்ட அக்கூடாரத்தின் அனைத்து உபகரணங்களும், ரனாவ் ஐபிடி அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து நன்கொடைகளாக பெறப்பட்டவை. மேலும், முகக்கவரி, கை கழுவும் திரவங்கள் மற்றும் அங்குள்ள மாணவர்களுக்கு உணவு கூடைகளையும் அவர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
- பெர்னாமா