அனைத்து தரப்பினரும் கோவிட் -19 அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, மக்களின் மன ஆரோக்கியத்தை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்று அம்னோ மகளிர் பிரிவு இன்று தெரிவித்தது.
அதன் தலைவர் நோராய்னி அகமது, தற்போதைய சூழ்நிலையில், மக்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) காலத்தில், பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட சிறுவர் துன்புறுத்தல் வழக்குகள் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக அரச மலேசியக் காவற்படையின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி, நோராய்னி இவ்வாறு கூறினார்.
“இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன, இதனால் அவர்கள் குழந்தைகளுக்கு எதிராக தகாத செயல்களைச் செய்ய முற்படுகின்றனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29-ம் தேதி, மலாக்காவில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சந்தேகிக்கப்படும் ஏழு வயது சிறுவனின் மரணம் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
போலிஸ் விசாரணைக்கு உதவ, பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரியல் தாய் மற்றும் மாற்றாந்தந்தை இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அக்குழந்தையின் மரணத்திற்குக் காரணமான தரப்பினர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றார் அவர்.