அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தங்கும் இடங்களை நிர்வகிப்பவர்கள், வெளிநாட்டவர்களைக் கோவிட் -19 சோதனையை எடுக்க அறிவுறுத்தி, வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக முடிவுகளைக் காட்டச் சொல்லலாம் என்று, மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் அளித்த அறிக்கையைப் பினாங்கு நுகர்வோர் சங்கம் (கேப்) விமர்சித்துள்ளது.
‘கேப்’ தலைவர் மொஹிதீன் அப்துல் காதர், வெளிநாட்டவரைக் குறிவைத்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கை விவேகமற்றது என்று விவரித்தார்.
“இது நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டக்கூடும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, நிருவாகச் சட்டம் 2013-இல், அதுதொடர்பான எந்தவொரு குறிப்பும் இல்லை, அதில் கூட்டு நிருவாக அமைப்பு (ஜே.எம்.பி.) அல்லது மேலாண்மை நிறுவனம் சோதனை முடிவுகளைக் காட்டத் தவறினால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடைசெய்ய அனுமதிக்கிறது.
குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்நோக்கும் வீட்டுவசதி பிரச்சினைகளையும் மொஹிதீன் எழுப்பினார்.
“தொழிற்சாலைகளில் பணிபுரியும் மற்றும் குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் குறித்து இஸ்மாயில் பேசினால், அரசாங்கம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும், ஏனென்றால் இதற்கு முன்பு அவர்கள் வாழ ஏற்ற இடத்திற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கவில்லை.
“எனவே, முதலாளிகள் குறைந்த அளவிலான தூய்மையுடன் கூடிய நெரிசலான குடியிருப்புகளில் அவர்களைத் தங்க வைக்கின்றனர். நிறுவனத்தின் ஒரே குறிக்கோள் அதிகபட்ச இலாபம் மட்டுமே, ஆனால் அரசாங்கம் கைவிட முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கை வல்லுநர்கள் மற்றும் சில எதிர்க்கட்சி எம்.பி.க்களின் விமர்சனங்களைத் தூண்டியது.
முன்னதாக, பல அடுக்குமாடி குடியிருப்புகளின் நிர்வாகங்கள், குடியிருப்பாளர்கள் கட்டாயம் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தன.
இருப்பினும், சில வல்லுநர்கள் அவ்வாறு செய்ய நிர்வாகத்தினருக்குச் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று கூறுகிறார்கள். தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இது உதவாது என்று பொது சுகாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.
2019-ஆம் ஆண்டில், ‘நெறிமுறை வர்த்தக முன்முயற்சி’யின் (Ethical Trading Initiative) அறிக்கை உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி பிரச்சினைகள் நீண்ட காலமாகப் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன, ஆனால் அது எதையும் மாற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“இப்போது அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் முதலாளிகளுக்கு அறிவுறுத்துகிறது. ஒரு மாதத்திற்கு முந்தைய சோதனை முடிவுகள் இன்னும் செல்லுபடியாகுமா என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம் அல்லது ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை அவர்கள் அதைச் செய்ய வேண்டுமா?”
சோதனைக்குத் தாங்களே பணம் செலுத்த வேண்டுமானால் வெளிநாட்டு தொழிலாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவார்கள், என்றார் அவர்.
“கோவிட் -19 தொற்றின் மோசமான நிலைக்கு, வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பலிகடா ஆக்கக் கூடாது.
“கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த சபா மாநிலப் பொதுத்தேர்தலுக்குப் பிறகும், டிசம்பர் 7-ல், மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகுமே இன்றைய நிலைமை ஏற்பட்டது.”
தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் ஒரு பகுத்தறிவு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும், அதைவிடுத்து வெளிநாட்டினரை இரையாக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
“சோதனை முடிவுகளைக் காட்ட முடியாதவர்கள், பாதிக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களைத் தெருவில் தூங்கவிட வேண்டுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.