அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும், மக்களுக்கு உதவத் தனியார் சுகாதாரச் சேவையாளர்களின் ஈடுபாட்டின் பிரச்சினையை நிர்வகிக்க தேசியக் கூட்டணி அரசாங்கம் (பிஎன்) தவறிவிட்டது என்று பி.கே.ஆர். கூறினார்.
கோவிட் -19 தொற்றின் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஒரு நாள், 5,000-க்கும் மேற்பட்ட நிலையை எட்டும் சூழ்நிலையில், நாடு உண்மையில் ‘போர்’ கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று பி.கே.ஆர். தேசியப் பொருளாளர் லீ சீயான் சுங் கூறினார்.
“பி.என். அரசாங்கம் நாடு தழுவிய அவசரநிலையை அறிவித்துள்ளது, ஆனால் மறுபுறம் தனியார் மருத்துவமனைகள் அவர்களின் சமூகப் பொறுப்புகளைச் செய்யச் சொல்வதைத் தவிர்க்கிறது.
“அவர்கள் சிகிச்சைக்கான விலை குறித்த பேச்சுவார்த்தைகளில் நேரத்தை வீணடிக்கிறார்கள். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவை வழங்கிய ஆலோசனையின் விளைவாக, ஜனவரி நடுப்பகுதியில் இருந்து மலேசியாவில் அவசரகால நிலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பதவியைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கை என்று விமர்சிக்கப்பட்ட போதிலும், கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ள நாட்டுக்கு அவசரநிலை தேவை என்று முஹைதீன் கூறினார்.
இதனை அறிவிக்கும் போது, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அரசாங்கம் இந்தக் காலகட்டத்தில் தனியார் துறையினரையும் இதில் ஈடுபடுத்த முடியும் என்று முஹைடின் கூறியிருந்தார்.
தனியார் மருத்துவமனைச் சொத்துக்களைக் கையகப்படுத்துதல் அல்லது அவற்றின் வளங்களைக் கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல் போன்ற தேவைகள் உள்ளிட்ட சில கட்டளைகளைப் பொதுவில் வெளியிட அவசரநிலைகள் அனுமதிக்கும் என்றார்.
தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகளின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் RM100 மில்லியன் ஒதுக்கீடு இன்னும் பல்வேறு சந்தேகங்களில் மூழ்கியுள்ளது என்று லீ கூறினார்.
எனவே, சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா இது குறித்த விரிவான தகவல்களை வழங்குவதன் மூலம் தெளிவினை வழங்க முன்வர வேண்டும் என்றார்.
இலாப நோக்கற்ற மனநிலையுடன், மலேசியர்களுக்குக் கோவிட் -19 மருத்துவச் சேவைகளை வழங்க தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்று பி.கே.ஆர். கேட்டுக் கொள்வதாகவும் லீ கூறினார்.
“அனைத்து மலேசியர்களும் கோவிட் -19 தொற்றுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில், தனியார் மருத்துவமனைகள் ஏன் இன்னும் தங்கள் இலாபத்தைப் பற்றி சிந்திக்கின்றன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மருத்துவமனை தனியார்மயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, கோவிட் -19 தொற்றுநோய் காலம் உட்பட, அவர்கள் இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் செமாம்பு சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“இதுபோன்றதொரு நிலை நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படாது. இப்போது நாட்டிற்காக அவர்களைத் தியாகம் செய்யும்படி கேட்காவிட்டால், மக்கள் இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்?” என்றும் அவர் கேட்டார்.