ஏழு பகுதிகளை ‘ராம்சார்’ நிலமாக மலேசியா பதிவு செய்கிறது

‘ராம்சார்’ தளங்களாக மலேசியா ஏழு பகுதிகளைப் பதிவு செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் ஷம்சுல் அனுவர் நசரா தெரிவித்தார்.

[‘ராம்சார்’ – 1971-ல் ஈரானின் ராம்சார் நகரில், 170 நாடுகள் கலந்துகொண்ட ஈரநில மேலாண்மை மாநாடு நடந்தது. இப்பெயர் அந்த இடத்தையொட்டி சூட்டப்பட்டது.]

பஹாங் – தாசெக் பெரா; ஜொகூர் – தஞ்சோங் பியாய், புலாவ் கூக்குப் மற்றும் சுங்கை பூலாய்; சரவாக் – கூச்சிங் வெட்லேண்ட்ஸ் தேசியப் பூங்கா; சபா – லோவர் கினாபாத்தாங்கான்-செகாமா வெட்லேண்ட்ஸ் மற்றும் கோத்த கினாபாலு வெட்லேண்ட்ஸ் ஆகியவையே அவை.

“இந்தத் தளங்கள் வனவியல், மாநிலப் பூங்கா மற்றும் நிலச் சட்டங்களின் கீழ் நிரந்தர வன இருப்புக்கள், மாநிலப் பூங்காக்கள் அல்லது சதுப்புநிலப் பாதுகாப்புப் பகுதிகளாகப் பாதுகாக்கப்படுகின்றன,” என்று அவர் இன்று 2021 உலக சதுப்புநிலத் தினத்தையொட்டி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று, பிப்ரவரி 2, ‘சர்வதேச நலன்களுக்கான ஈரநில மாநாடு’ நிறுவப்பட்ட 50-வது ஆண்டு நிறைவு அல்லது ‘ராம்சார் மாநாடு – 2 பிப்ரவரி 1971’ என்று அழைக்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களாகப் பதிவு செய்யப்பட்டவை, ஈரநிலப் பகுதியின் ஒரு சிறியப் பகுதி மட்டுமே என்று ஷம்சுல் அனுவர் கூறினார்.

“குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாத சதுப்புநிலங்கள் இன்னும் நிறைய உள்ளன,” என்று கூறிய அவர், மாநில அரசுகள், உள்ளூர் அதிகாரிகள், தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் முயற்சிகள் மற்றும் திட்டங்களை உறுதிப்படுத்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரினார்.

மலேசியாவில், ஈரநிலங்கள் என்பது மக்கு நிலங்கள் (peatlands), சதுப்பு நிலங்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது, அவை பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடமாக இருக்கின்றன, குறிப்பாக புலம்பெயரும் நீர் பறவைகளுக்கு.

வனப் பொருட்கள், கடல் மற்றும் சுற்றுலா வடிவத்தில் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் ஈரநிலங்கள் அதிகப் பாதுகாப்பு மதிப்புகளைக் கொண்டுள்ளன, அத்துடன் சுனாமி பாதுகாப்பு, நீர்ப்பிடிப்பு பகுதிகள், இனப்பெருக்கம் செய்யும் பகுதிகள், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் கரிமப்பிடிப்பு பகுதிகள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளின் நன்மைகளை அவை கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

“உலகின் 40 விழுக்காடு உயிரினங்கள் வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஈரநிலங்கள் உதவுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட புதிய மீன் இனங்கள் ஈரநிலங்களில் காணப்படுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா