வெளியீட்டாளர் : தாமஸ் புத்தகத்தின் திருட்டு நகல்களை விநியோகிப்பதை நிறுத்துங்கள்

‘மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்’ (My Story: Justice in the Wilderness) என்ற தலைப்பில், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ் எழுதிய நினைவுக் குறிப்புப் புத்தகத்தின் வெளியீட்டாளர், அப்பிரதியின் மென்பொருளை இயங்கலையில் விநியோகித்த தனிநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறினார்.

“அப்புத்தகத்தின் நகலை, பி.டி.எஃப். முறையில் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், அப்பதிப்பை நீக்குமாறும் நாங்கள் அத்தரப்பைக் கேட்டுக்கொள்கிறோம்.

“திருட்டு பதிப்பு என்பது அறிவுசார் சொத்து சட்டத்தை மீறுவது என்பதை நினைவுறுத்தி, இந்த அறிவிப்பை நாங்கள் விடுக்கிறோம், இது தீர்க்கப்படாவிட்டால் இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளோம்,” என்று உள்ளூர் வெளியீட்டு நிறுவனமான ‘கெராக்புடாயா’ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 30-ல் வெளியீடு கண்ட தாமஸின் புத்தகம், இரண்டு நாட்களில் விற்று முடிக்கப்பட்டது.

முகநூல் அறிவிப்பு ஒன்றில், தனது தரப்பு அப்புத்தகத்தை மறுபதிப்பு செய்யவுள்ளதாக ‘கெராக்புடாயா’ கூறியது.

மேலும், ஜனவரி 29-ஆம் தேதி புத்தகத்திற்கு முன்பதிவு செய்தவர்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் புத்தகத்தின் நகலைப் பெறலாம் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்தது.

ஜனவரி 29-க்குப் பிறகு, முன்பதிவு செய்பவர்களுக்குப் பிப்ரவரி இறுதியில் புத்தகம் கிடைக்கும்.

‘கெராக்புடாயா’ நிறுவனர் சோங் தான் சின், 1,000-க்கும் மேற்பட்ட புத்தக முன்பதிவுகளைப் பெற்றதாக மலேசியாகினியிடம் கூறினார்.

‘கெராக்புடாயா’ முதல்முறையாக 2,000 புத்தகங்களை அச்சிட்டு, இரண்டு நாட்களில் விற்று தீர்த்ததாகவும், இப்போது மேலும் 5,000 பிரதிகள் மறுபதிப்பு செய்வதாகவும் சோங் சொன்னார்.

இரண்டாவது அச்சிடப்பட்ட புத்தகம், பிப்ரவரி 5-ஆம் தேதி கிடைக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சோங் விளக்கினார்.

“2,000 புத்தகங்களும் புத்தகக் கடைகளில் எங்களால் விற்கப்படுவதில்லை, அவற்றில் பாதி இயங்கலையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலவற்றை ‘கினோகுனியா’ போன்ற பிறக் கடைகளுக்கும் அனுப்புகிறோம்,” என்று அவர் விளக்கினார்.