நஜிப் : புத்தகத்தில் உள்ள குற்றச்சாட்டை மீட்டுக்கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையில், பெக்கன் எம்.பி.-க்கு தொடர்பு உள்ளது எனத் தனது நினைவுக் குறிப்பில் உள்ள குற்றச்சாட்டுகளை, முன்னாள் தலைமை நீதிபதி தோமி தாமஸ் மீட்டுக்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரியுள்ளார்.

நஜிப்பின் வழக்கறிஞரான முஹம்மது ஷாஃபி அப்துல்லா, தனது கட்சிக்காரர் RM10 மில்லியன் இழப்பீடு கோருவதாகவும், “மன்னிப்பு” கேட்க வேண்டுமென்றும் தாமஸுக்குச் சமர்பிக்கப்பட்ட உரிமைகோரல் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய தாமஸுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவரது தரப்பு, அடுத்த வாரத் தொடக்கத்தில் தாமஸுக்கு எதிராக அவதூறு வழக்கைத் தாக்கல் செய்யும் என ஷாஃபி சொன்னார்.

தாமஸ் தனது புதிய வெளியீடான, “மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்” (My Story: Justice in the Wilderness) என்ற புத்தகத்தில் அவரின் கருத்து, மிகவும் கவனக்குறைவாகவும், பொறுப்பற்றதாகவும், தீங்கிழைக்கும் விதமாகவும், நஜிப்பின் நற்பெயரைப் பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்துவதாகவும், தனது வாடிக்கையாளரை மக்கள் வெறுத்து, அவமதித்து, கேலி செய்யும் நோக்கங்கொண்டது என்று ஷாஃபி கூறினார்.

“நீங்கள் அவரைச் சுறுக்கமாக ஒரு கொலையாளி என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அந்தக் குற்றச்சாட்டு தெளிவாகத் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது; அதில் உண்மையில்லை, அது அடிப்படையற்றது, ஆதாரம் இல்லாதது.

“மலிவான விளம்பரம் மற்றும் இலாபம் ஈட்டும் சுய நலப்போக்குக் கொண்டது,” என்று ஷஃபி கூறினார்.

அது நஜிப்பின் மனநிலையைப் பாதித்துள்ளதாகவும் ஷஃபி சொன்னார்.

“அண்மையில், இன்ஸ்பெக்டர் அஸிலா ஹத்ரி மற்றும் கோப்பரல் சிறுல் அஸார் உமர் ஆகியோரின் தண்டனை தொடர்பான முடிவை மறுஆய்வு செய்வதற்கான முயற்சியைப் பெடரல் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது தெரிந்திருந்தும் நீங்கள் வேண்டுமென்றே அந்தக் குறிப்பை வெளியிட்டு உள்ளீர்கள்,” என்றும் அவர் கூறினார்.

அஸிலா குற்றம் சாட்டியபடி, அந்த வெளிநாட்டு உளவாளியைக் கொல்ல தனக்கு உத்தரவிடப்பட்டதாக, ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு சிறுல் முன்னர் தெரிவித்ததாக தாமஸ் கூறினார்.

தாமஸின் கூற்றுப்படி, இது ஒரு மூத்த அரசு துணை வழக்கறிஞருடன் நடந்த நேர்காணலின் அடிப்படையில் அமைந்தது, அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள வில்லாவுட் குடிநுழைவு தடுப்பு முகாமில் சிறுலைச் சந்திக்க உத்தரவிட்டார்.

சிறுல் மற்றும் அஸிலா இருவரும் சிறப்புக் காவல்துறை கமாண்டோ அணியின் முன்னாள் உறுப்பினர்கள். 2006-ல் மங்கோலியப் பெண் கொலை வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இருப்பினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து சிறுல் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றார்.

பெடரல் நீதிமன்றம் பின்னர் தண்டனையை மீட்டு, அவருக்கு மரண தண்டனை விதித்தது.