`தலைவரை மாற்றுங்கள்` – கலீட் பரிந்துரை, நூர் ஹிஷாம் சுகாதார அமைச்சைத் தற்காத்தார்

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம், தனது தலைமை கூட்டு முடிவுகளின் அடிப்படையிலானது மற்றும் வரையறுக்கப்பட்டது என்பதை விளக்கினார்.

“நான் சுகாதார அமைச்சின் முகம், அமைச்சின் அனைத்து வல்லுனர்களின் கருத்துக்களையும் – பொது சுகாதார ஆய்வகங்கள் முதல் மருத்துவமனை வல்லுனர்கள் வரை – பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

“ஒவ்வொரு நாள் காலையிலும், நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களையும் சவால்களையும் சரிசெய்கிறோம், விவாதிக்கிறோம்; பின்னர், அதை நாங்கள் தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) மற்றும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கான நாட்டின் புதிய அணுகுமுறையை வழிநடத்தவும் வகுக்கவும் ஒரு புதிய “தலைவரை” நியமிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவர் மொஹமட் கலீட் நோர்டின் அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாக நூர் ஹிஷாம் இதனைக் கூறினார்.

இருப்பினும், தனது அழைப்பு, நூர் ஹிஷாம் இடத்தில் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் கலீட் நேற்று கூறினார்.

அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றுடன் போராடுவதற்கு, ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்க அரசாங்கத்திற்கு இப்போது ஒரு புதிய ‘ஸார்’ தேவை என்றார் அந்த முன்னாள் ஜொகூர் மந்திரி பெசார்.

முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்துவிட்டது, ஆனால் இதுவரை நல்ல முன்னேற்றத்தைக் காட்டும் அறிகுறிகள் இல்லை என்று கலீட் கூறினார்.

அதே நேரத்தில், அதிகமான மக்கள் வருமானத்தை இழந்து வருவதாகவும், பொது சுகாதார அமைப்பு மோசமடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த அழைப்பு குறித்து மேலும் கருத்து தெரிவித்த நூர் ஹிஷாம், அமைச்சின் பங்கு நிர்வாகிக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே என வலியுறுத்தினார்.

“முதல் நாள் முதல், நாங்கள் எம்.கே.என்-க்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.

“கூட்டு முடிவைப் பிரதமரும் (முஹைதீன் யாசின்) எம்.கே.என்.உம் எடுக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.