ஊழல் : ஈசா சமட்டுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM15.4 மில்லியன் தண்டம்

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மொஹமட் ஈசா அப்துல் சமட் இன்று ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM15.45 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டார்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் மொஹமட் ஈசாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி தீர்ப்பளித்தார். இருப்பினும், அனைத்து சிறைத் தண்டனையும் ஒரே நேரத்தில் இயங்க நீதிபதி அனுமதித்தார்.

தண்டத்தைப் பொறுத்தவரை, ஈசா ஒவ்வொரு குற்றத்திற்கும் பணம் செலுத்தத் தவறினால் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி, மொஹட் ஈசாவின் தற்காப்பு வழக்குரைஞர் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட வழக்கு குறித்த நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறிவிட்டது என்றார்.

முன்னதாக, கையூட்டு வாங்கியதாக ஒன்பது குற்றச்சாட்டுகள் ஈசா மீது சுமத்தப்பட்டன. கெகாசன் அபாடி புரோப்பட்டீஸ் சென். பெர்.-இன் இயக்குநர்கள் குழுவிடமிருந்து, முஹம்மது ஜாஹித் அரிப் மூலமாக, ஈசா RM3.09 மில்லியன் மதிப்புள்ள பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

RM160 மில்லியன் மதிப்புள்ள மெர்டேகா பேலஸ் & சூட்ஸ் தங்கும் விடுதிக்கு ஒப்புதல் அளிக்க உதவியதற்காக மொஹட் ஈசாவுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

சரவாக், கூச்சிங்கில் அமைந்துள்ள இந்தத் தங்கும் விடுதியை `ஃபெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் சென். பெர். வாங்கியுள்ளது.

எவ்வாறாயினும், தண்டனையை நிறைவேற்றுவதற்கானப் பிரதிவாதியின் விண்ணப்பத்தையும், இந்த வழக்கின் மேல்முறையீட்டையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்யும் வரை தண்டத்தை ஒத்திவைக்க நீதிபதி அனுமதித்தார்.

தனது தீர்ப்பை வாசிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிக்க வாய்ப்பளிப்பதற்காகவும், அதேக் குற்றத்தை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்கான ஒரு பாடமாகவும் – மற்றவர்கள் உட்பட – வழங்குவதாக ​​மொஹமட் நஸ்லான் கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி, அவரது நிருவாகப் பதிவு மற்றும் தேசிய அரசியலில் அவர் ஈடுபட்டிருப்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.

தற்போதைய RM800,000-உடன் ஒப்பிடும்போது, மொஹமட் ஈசாவுக்கு RM1.5 மில்லியனாக ஜாமீன் தொகை அதிகரிக்கப்பட்டது.

நீதிபதி நாளை பிற்பகல் 2 மணிக்குள் ஜாமீன் தொகையை வழங்க அனுமதித்தார்.

“மேல்முறையீடு முடிவடையும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர் மாதத்தின் ஒவ்வொரு 1-ம் தேதியும் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று தன்னை அறிவிக்க வேண்டும்,” என்றும் நீதிபதி கூறினார்.

மொஹமட் ஈசாவை வழக்கறிஞர் சலேஹுடின் சைடின் பிரதிநிதித்துவப்படுத்தினார்.