ஆஸ்திரேலியாவில், சொத்து பரிவர்த்தனைகள் மூலம் RM33.45 மில்லியன் கையூட்டு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), இன்று `டத்தோ` பட்டத்தைக் கொண்ட `மாரா இன்கோபரேட்` நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவரைக் கைது செய்துள்ளது.
புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்த அந்தச் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, எம்.ஏ.சி.சி.யின் தலைமை ஆணையர் உறுதிப்படுத்தினார்.
65 வயதான அச்சந்தேக நபர், ஆஸ்திரேலியாவில் `டட்லி இன்டர்நேஷனல் ஹவுஸ்`-ஐ `மாரா இன்க்` வாங்கியது தொடர்பில், 22 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அஸாம் கூறினார்.
மலேசிய அரசாங்கத்திற்கு, எர்ன்ஸ்ட் & யங் சட்ட நிறுவனம் தயாரித்தளித்த அறிக்கையின் முலம் இத்தகவல் கசிந்து, மெல்பர்னில் உள்ள `தி ஏஜ்` செய்தித்தாள் மற்றும் `தி சிட்னி மார்னிங் ஹெரால்டு` ஆகியவற்றில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2019-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக மூன்று முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் இச்செய்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு எம்.ஏ.சி.சி. தனது விசாரணையைத் தொடங்கியது.
`மாரா இன்க்` நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மீது, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்படும்.
எம்.ஏ.சி.சி. சட்டம் 2009-இன் பிரிவு 16(a) & பிரிவு 17 (a) மற்றும் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை சட்டம் 2001 ஆகியவற்றின் கீழ் அனைத்து 22 குற்றச்சாட்டுகளும் கொண்டுவரப்படும்.
16(a) மற்றும் 17 (a) ஆகிய இரு பிரிவுகளும், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், கையூட்டின் மதிப்பை விட ஐந்து மடங்கு குறையாத தண்டமும் விதிக்கின்றன.