மார்சுகி : மூடா-உடன் இணைந்து பணியாற்றப் பெஜுவாங் தயார்

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் அவரும் அவரது சகாக்களும், பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதனால், மலாய் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் கட்சியை நிறுவுவதாக அறிவித்தார்.

பெர்சத்துவுக்கும் அதன் உயர் தலைமைக்கும் எதிராக, அவர்கள் தாக்கல் செய்த வழக்கை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த நேரத்தில், மகாதீர் தரப்பில் இருந்த 6 தலைவர்கள் புதிய கட்சியின் பின்னால் உள்ள முக்கிய தூண்களாகக் காணப்பட்டனர் – மகாதீர், அவரது மகன் முக்ரீஸ், சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக்; மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான்; குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் அமிருதீன் ஹம்சா மற்றும் பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளரான செனட்டர் மார்சுகி யஹ்யா ஆகியோர்.

இருப்பினும், புதிய கட்சியின் பெயரை மகாதீர் அறிவிக்க வேண்டிய நேரம் வந்தபோது, ​​அவர்களில் ஒருவர் அப்பட்டியலில் இல்லை.

ஒதுக்கப்பட்ட அந்தத் தனிநபர் சையத் சதிக் – ஒரு காலத்தில் மகாதீரின் ‘தங்கக் குழந்தை’ என்று அழைக்கப்பட்டவர். அப்போதுதான் சையத் சதிக் மற்றொரு யோசனையில் இருப்பது அறியப்பட்டது, அதாவது இப்போது ‘மூடா’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய அரசியல் கட்சியை நிறுவுதல்.

கடந்த வாரம் மலேசியாகினிக்கு மார்சுகி அளித்த பேட்டியில், சையத் சதிக் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“சையத் சதிக், பெர்சத்துவில் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராவார். நாங்கள் அவரை இளைஞர்களின் ஓர் அடையாளமாக உருவாக்குவதில் வெற்றி கண்டோம்.

“பெர்சத்துவில் பிளவு ஏற்பட்டபோது, ​​அவர் தனது சொந்த கட்சியான மூடா’வை நிறுவ முடிவு செய்தார், மேலும் அவர் எங்களுடன் இருக்க விரும்பவில்லை, ஏனென்றால், அவர் இளைஞர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த விரும்பினார்.

“என்னைப் பொறுத்தவரை, சையத் சதிக் பெர்சத்துவில் உள்ள மற்ற என் உடன்பிறப்புகளைப் போன்றவர், இன்ப துன்பங்களை நாங்கள் ஒன்றாகவே எதிர்கொண்டோம். நான் அவரது முடிவை மதிக்கிறேன், நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் எதிராகப் போராடியதில்லை,” என்று அவர் கூறினார்.

மகாதீர் பெர்சத்து கட்சியின் தலைவரானபோது, ​​இளைஞர்களின் தலைவராக சையத் சதிக் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் ஏழு நிறுவனர்களில் இவரும் ஒருவர்.

முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது பெஜுவாங் வெறுப்புணர்வு கொண்டிருக்கவில்லை, அதுமட்டுமல்லாமல், மூடாவுடன் அரசியல் ரீதியாக ஒத்துழைக்கவும் தயாராக இருப்பதாக மார்சுகி சொன்னார்.

“அதனால், எங்களது போராட்டத்தில் மூடா இணைய விரும்பினால், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். அது ஒரு பெரிய தடையல்ல.

“பெஜுவாங்கில் டாக்டர் அபு ஹஃபிஸ் சல்லே ஹுடின் போன்ற இளம் தலைவர்களையும் தற்போது நாங்கள் உருவாக்குகிறோம், நாங்கள் அவரை இளைஞர் தலைவராக நியமித்துள்ளோம், அவர் பெஜுவாங் இளைஞர்களை வழிநடத்துவார்.

“அவர் எதிர்காலத் தலைவர்களில் ஒரு பகுதியாக இருக்க முடியும், அவர்கள் நாம் விரும்பும் மலேசிய நாட்டின் நலனுக்காக சையத் சதிக்குடன் கைகோர்த்து செயல்பட முடியும்,” என்று அவர் விளக்கினார்.

மகாதீர் – அன்வர்

இதற்கிடையில், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுடனான மகாதீரின் உறவு குறித்தும் மலேசியாகினி மர்சுகியிடம் கேட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், பக்காத்தான் ஹராப்பான் வீழ்ந்ததை அடுத்து இரு மூத்த அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது.

மகாதிர் பதவி விலக முடிவு செய்தபோது, அன்வர் பிரதமராக வருவதை மகாதீர் தடுத்ததாகக் குற்றம் சாட்டினர், அந்தப் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்காததால்.

இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கையில், அக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று வர்ணித்த மார்சுகி, குற்றம் சாட்டப்பட வேண்டிய கட்சி பி.கே.ஆர்.தான் என்றார்.

“அந்த நேரத்தில் பி.எச். கூட்டணியை விட்டு வெளியேறியவர்களில், பெரும்பான்மையானவர்கள் பி.கே.ஆர்.-ஐ சார்ந்தவர்கள், அஸ்மின் அலி தலைமையிலானவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக பி.கே.ஆரில் முன்னாள் துணைத் தலைவராக இருந்த அஸ்மின், அன்வரை விட மகாதீருக்கு ஆதரவாகவே பார்க்கப்படுகிறார்.

பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணியிடமிருந்து புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்ற முயன்றபோது, பிரதம வேட்பாளர்களாக இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க மறுத்ததால், மகாதீர் மற்றும் அன்வாரின் உறவில் பெருமளவில் பதற்றமடைந்தது.

இரு தலைவர்களிடையே அரசியல் சண்டை மீண்டும் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என்று மார்சுகி நம்புகிறார்.

“எது வேண்டுமானாலும் நடக்கலாம், அதன் உண்மையான திசையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

“இப்போது மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாட்டையும் தற்போதைய சூழ்நிலையையும் காப்பாற்ற ஒரு வழி இருந்தால், நாங்கள் ஒன்றாக இருப்போம்.

“எனவே, மீண்டும் இணைந்து (பி.கே.ஆருடன்) பணியாற்றுவது என்பது சாத்தியமற்றது அல்ல என்று நான் நினைக்கிறேன். எப்படி, எவ்வாறு ஒன்றாக வேலை செய்வது என்பது மட்டுமே பிரச்சனை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.