கைருட்டின் : பிரதமரைப் பதவிவிலக அறிவுறுத்துமாறு, ஏ.ஜி.க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்

முஹைதீன் யாசின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய அறிவுறுத்துமாறு சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) இட்ருஸ் அஸிஸான் ஹருனுக்கு உத்தரவிட வேண்டுமென, டாக்டர் மகாதீர் முகமதுவின் வலுவான ஆதரவாளரான கைருட்டின் அபுஹாசன், நீதிமன்றத்தில் நீதி மறுஆய்வு கோரி ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

கைருட்டின், தனது வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் கத்ரி அப்துல்லா மூலம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதி மறுஆய்வு அனுமதி கோரி நேற்று பிற்பகல் விண்ணப்பம் செய்தார்.

அவசரகாலப் பிரகடனம் குறித்து, பேரரசருக்கு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில், முஹைதீன் மீது கைருட்டின் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளதை அடுத்து, இது மற்றொரு சட்ட நடவடிக்கை ஆகும்.

நீதித்துறை மறுஆய்வு அனுமதி விண்ணப்பத்தின் நகலின் அடிப்படையில், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய, முஹைதீன் பேரரசரைச் சந்திக்க இட்ருஸ் அறிவுறுத்த வேண்டுமென கைருட்டின் ஓர் உத்தரவைக் கேட்டார்.

ஜனவரி 9-ம் தேதி மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதில், சட்டத்துறை தலைவராக தனது கடமையை நிறைவேற்ற இட்ருஸ் தவறிவிட்டார் என்று அவர் கூறினார்.

முஹைதீன் பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், ஜனவரி 11-ஆம் தேதி, பேரரசருக்குப், பிரதமராக எந்தவோர் ஆலோசனையும் வழங்க கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் அவருக்குத் தகுதி இல்லை என்றும் அவர் கூறினார்.

அன்று, நாட்டின் நேர்மறையான கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த, அவசரகால அறிவிப்பு குறித்து ஆலோசனை வழங்க, பேரரசரை அணுகிய முஹைதீனின் தூதுக்குழுவில் இட்ருஸும் இடம்பெற்றிருந்தார்.

“தேசியச் சட்டத்துறைத் தலைவராக அவரின் நடவடிக்கை நியாயமற்றது, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது மட்டுமல்லாமல், அடிப்படை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானது என நான் நம்புகிறேன், எனது வழக்குரைஞராலும் நான் அறிவுறுத்தப்படுகிறேன்,” என்று கைருட்டின் குறிப்பிட்டுள்ளார்.