தோமி தாமஸின் புத்தகம் மிகப்பெரியதொரு தோல்வி – ஷாரில் ஹம்டான்

விமர்சனம் | பக்காத்தான் ஹராப்பானின், ஆரம்பக் காலப்பகுதியில், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ் மற்றும் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மொஹமட் அரிஃப் யூசோப் ஆகியோருடன் ஒரே அவையில் அமர்ந்திருக்கிறேன்.

அவர்களுடன், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் விவாதிக்கவும் அம்னோ தயாராக இருக்கிறது என்பதை நிரூபிக்க மட்டுமல்லாமல், அவர்கள் வகிக்கும் நிறுவனங்களுக்கும் பதவிகளுக்கும் மரியாதை கொடுக்கும் நிமித்தமாகவும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.

ஆகவே, இந்த இரண்டொரு நாள்களாக, “என் கதை : தரிசில் தேடும் நீதி” (My Story: Justice in the Wilderness) என்றத் தலைப்பில் எழுதப்பட்ட தோமி தாமஸின் “நினைவுக் குறிப்பு” புத்தகம் குறித்து ஏற்பட்ட சர்ச்சையில் நான் ஆர்வம் கொண்டேன்.

அனைவரின் பேச்சுப் பொருளாக மாறும் அளவுக்கு, அப்புத்தகத்தில் உண்மையில் என்னதான் எழுதியிருந்தார் தாமஸ் என்பதை அறிந்துகொள்ள நான் ஆர்வமாக இருந்தேன்.

நீங்கள் ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்பினால், முதலில் அதைப் படித்திருக்க வேண்டும். ஒருவர் போலிஸ் புகார் அளித்து, வழக்குத் தொடுக்கும் வரை போகிறார் எனும் அளவுக்குப் பரபரப்பாக அப்புத்தகம் மாறியது ஏன் என்று படித்த பிறகு எனக்குப் புரிந்தது.

சட்டத்துறைத் தலைவர் பதவி ஒரு சிறிய பதவி அல்ல. இது அரசியலமைப்பு பிரிவு 145-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. நிச்சயமாகச் சட்டத்துறைத் தலைவராக ஆகும்போது, ​​சேவை காலம் முடிவடைந்த பின்னரும், நிறுவனத்திற்கு ஏற்ற ஒரு நெறிமுறைகள் மற்றும் நாகரீகம் உண்டு. நீங்கள் ஓர் <em>இன்சைடர்</em> பத்திரிகையாளர் போல, விரும்புவதை எழுத முடியாது.

ஆனால் தாமஸுக்கு அது இல்லை. அனைவரையும் அவமதித்து, குற்றம் சாட்டினார். தனது முதலாளி-ஆன – அவரை அப்பதவியில் நியமித்த 7-வது பிரதமர் உட்பட, 6-வது பிரதமர், 2-வது பிரதமர் என அனைவரையும் ஏளனம் செய்ய அவர் தவறவில்லை.

மறைந்த துன் ரசாக் பற்றி தாமஸ் எழுதியது மிகவும் வருத்தமளிக்கிறது, ஒரு முன்னாள் சட்டத்துறை தலைவரிடம் இருந்து அவ்வாறு வருவது ஒருபுறம் இருக்க.

மே 13 சம்பவம் தொடர்பாக எழுதப்பட்ட மேற்கோள்களில், அவர் துன் ரசாக் மீது விரல் காட்டுவது போல் தோன்றியது.

புத்தகத்தின் 28-வது பக்கத்தில், மலேசிய வரலாற்றில் இருண்ட சம்பவம் ஒன்றைத் துன் ரசாக் திட்டமிட்டதாக தாமஸ் சற்றும் தயங்காமல் கூறியுள்ளார்.

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் ‘மொட்டைக் கடுதாசி’ ஆசிரியர் அல்ல. அவர் இதுவரை கூறியதற்கான சான்றுகள், மலேசிய மேம்பாட்டுத் தந்தைக்கு எதிராக மிகத் தெளிவான மற்றும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் – அக்குற்றச்சாட்டுகளை மறுக்க அவர் இப்போது நம்மிடம் இல்லை.

இது மிகவும் கடுமையான அவமானம் – நாட்டின் முன்னாள் தலைவரின் ஆளுமையை இழிவுபடுத்தும் ஒரு செயல். இது ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல, “அனுமானம்” மட்டுமே.

அல்தான்துயாவின் கொலை பற்றியும் – நஜிப் ரசாக் கோரிக்கைக் கடிதம் சமர்ப்பித்திருந்தாலும் – அதில் எழுதப்பட்டுள்ளது.

 

“அரசாங்கத்திற்காக செயல்படும் சட்டத்துறை தலைவர் அலுவலக வழக்கறிஞர்கள், அர்ப்பணிப்பும் ஆர்வமும், வெற்றி பெறவேண்டும் எனும் உந்துதலும் இல்லாதவர்கள் என்பதை நான் உணர்ந்தேன்.”

“அவர்கள் அரசு ஊழியர்கள், நிலையான வருமானம் ஈட்டுகிறார்கள் மற்றும் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியத்திற்காகக் காத்திருக்கிறார்கள். தங்களை மேன்மையடையச் செய்ய எந்த ஊக்கமும் அவர்களுக்கு இல்லை,” என்றும் அதில் தாமஸ் கூறியுள்ளார்.

அம்னோவைப் பற்றி எழுதப்பட்டதில், தனிநபர்களை விமர்சிப்பது மட்டுமல்லாமல் முழு அம்னோ நிறுவனத்தையும் தனது புத்தகத்தில் பல முறை கேலி செய்துள்ளார் தாமஸ்.

துன் மகாதீருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையிலான உறவு, இஸ்தானா நெகாராவில் நடந்த சந்திப்பு, இடைக்காலப் பிரதமராக இருந்தபோது தாமஸ் மற்றும் துன் மகாதீர் இடையிலான உரையாடல் – இவை அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வது கடினம், முன்னாள் சட்டத்துறைத் தலைவரின் “தரநிலை” இதுதானா?

எழுதப்பட்டதை அவரது பார்வை என்று தாமஸ் சொல்வார் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை, உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்கள் என யாரையும் குறைகூறவும் வெறுக்கவும் தனக்கு உரிமை உண்டு என்று அவர் கருதுகிறார் போலும்.

உண்மை, அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. இப்போது நான் எனது கருத்தைக் கூறுவது போல – என் பார்வை தாமஸ் எழுதியதை அடிப்படையாகக் கொண்டது, வதந்திகள் அல்லது தப்பெண்ணத்தின் அடிப்படையில் அல்ல.

ஆனால், தாமஸ் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும், சட்ட அமைப்பின் கீழ் சில கருத்து பறிமாற்றங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அவற்றுள் சில சட்டவிரோதமானது இல்லையென்றாலும், முன்னாள் சட்டத்துறைத் தலைவரிடமிருந்து வருவது பொருத்தமற்றது.

போலிஸ் புகார்கள் மற்றும் அறிக்கைகள் – இது தர்மசங்கடமான விஷயம், அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்ட மீறல்கள் (ஓஎஸ்ஏ), அவதூறு வழக்குகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எனத் தீர்மானிக்கப்படும் வேறு எதுவும் – தொடரலாம்.

இவற்றுக்கு இடையே, ​​நான் தோமி தாமஸுக்கு ஒன்று கூற விரும்புகிறேன் :

ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். உங்கள் புத்தகத்தால், நீங்கள் பல தரப்பினரை அவமதித்ததோடு மட்டுமல்லாமல், நீங்கள் ஒரு முறை வகித்து வந்த சட்டத்துறைத் தலைவர் நிறுவனத்தையும் அவமதித்து உள்ளீர்கள்.

சட்டத்துறைத் தலைவராக இருந்தபோது அடைந்த தோல்வியை மறைக்க விரும்பவில்லை, ஒருவேளை இந்தப் புத்தகம் இதுவரை நீங்கள் கண்ட மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாகலாம்.


ஷாரில் ஹம்டான், அம்னோ தகவல் பிரிவுத் தலைவர்.