மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஹமீட் சுல்தான் அபு பேக்கரை நீதித்துறை நெறிமுறைகள் குழு (ஜே.இ.சி.) ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது.
இந்த இடைநீக்கம் அவரது நீதிபதி பதவியை முடிவடையச் செய்கிறது, காரணம் அவர் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.
இந்த முடிவை, அச்செயற்குழு தங்களுக்கு அறிவித்ததாக, ஹமீட்டை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் வில்சன் ஜாய் அப்புகுட்டன் தெரிவித்தார்.
“புகார் நிரூபிக்கப்பட்டதில் அவர்கள் திருப்தி அடைவதாகவும், இன்று முதல் ஆகஸ்ட் 27 வரை ஹமீட் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் ஜே.இ.சி. தலைவர் கூறினார்,” என்று ஃப்ரி மலேசியா டுடே செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதிபதிகள் நெறிமுறைகள் செயற்குழு சட்டம் 2010 நடைமுறைக்கு வந்த பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி ஹமீட் ஆவார்.
முன்னதாக, ஜே.இ.சி. முன் ஆஜராகுமாறு கேட்கப்பட்ட ஹமீட், ஜே.இ.சி.-யின் அமைப்பு மற்றும் அரசியலமைப்பைச் சவால் செய்ய விரும்பியதால் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பல உயரடுக்கு வழக்குகளில் நீதித்துறை தலையீடுகள் இருந்ததாக ஹமீட் குற்றஞ்சாட்டினார்.
2019 பிப்ரவரியில், நீதித்துறையில் அதிகார அத்துமீறல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக ஹமீட் உறுதிச்சான்று தாக்கல் செய்தார்.
உறுதிச்சான்றின் முக்கியப் பகுதிகள் சிலவற்றை விலக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்நேரத்தில், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையத்தை (ஆர்.சி.ஐ.) அமைக்க திட்டமிட்டது, ஆனால் அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ், நீதிபதிகளின் ஆட்சேபனை காரணமாக அந்த விஷயத்தைச் செயல்படுத்த முடியாது என்று கூறினார்.
அதன்பின்னர், ஜே.இ.சி. ஹமீட்டுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கி, ஆகஸ்ட் 2020-ல் ஒரு காரணக் கடிதத்தை வழங்க உத்தரவிட்டது.
அவர் அளித்த வாக்குமூலத்தை தெளிவுபடுத்தும்படி அவரிடம் கேட்கப்பட்டது.
மத்திய அரசியலமைப்பு பொது நலன் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு திருத்தம் செய்யப்படாமல் இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய இடத்தில், தனது தீர்ப்பைத் தெளிவுபடுத்தவும் ஹமீட் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
தலைமை நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் வலைத்தளத்தின்படி, மார்ச் 1, 2007-ல், நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட ஹமீட், அக்டோபர் 1, 2009-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆனார்.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் ஜனவரி 7, 2013 வரை பதவி உயர்வு பெற்றதிலிருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளார்.