நேற்று மதியம், ஜார்ஜ்டவுன், தஞ்சோங் பூங்காவின், ஜலான் சீ செங்கில், சுமார் 7.3 ஹெக்டர் வனப்பகுதியில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அத்தீயை அணைத்தனர்.
பாகான் ஜெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையச் செயல்பாட்டு தளபதி வான் சிக் அரிஃபின் மொஹமட் இஸ்மாயில், தீயணைப்புப் படையினருக்கு மாலை 4.42 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக் கூறினார்.
“சுமார் 7.3 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதியில், மூன்று பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். மொத்தம் 50 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
தீயை அணைக்க ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது என்றும், தீயை அணைக்கும் இயந்திரம் மற்றும் ‘ஜெட் ஷூட்டர்’-ஐப் பயன்படுத்தி அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இரவு 9.41 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், சுமார் ஒரு மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டதாகவும், தீக்கான காரணம் குறித்து பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தடயவியல் குழு இன்னும் விசாரித்து வருவதாகவும் வான் சிக் அரிஃபின் தெரிவித்தார்.
தீ விபத்தில் யாரும் பலியாகவில்லை என்றும், மவுண்ட் எர்ஸ்கைன், பாயா தெருபோங் மற்றும் புக்கிட் பெண்டேரா தன்னார்வத் தீயணைப்புப் படையினர் தீயணைப்புப் பணிகளுக்கு உதவி செய்ததாகவும் அவர் கூறினார்.
- பெர்னாமா