‘ஆசிரியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்’

கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட குழுக்களில் ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுமாறு முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசிக்கு தற்போது மூன்று கட்டங்கள் உள்ளன, முதல் கட்டமாக 500,000 மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத முன்னணி ஊழியர்கள் ஈடுபடுவார்கள், இது மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி மூடல்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், அவை தொலைநோக்கு தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

“கற்றல் நேரம் மட்டுமல்லாமல், பள்ளி நிறுவனங்கள் வழங்கிவந்த பாதுகாப்பு பற்றாக்குறையும், அதாவது B40 பிரிவைச் சார்ந்த பல மாணவர்களுக்கான உணவுத் திட்டங்கள் (துணை உணவுத் திட்டம்), பழங்குடி மக்களின் குழந்தைகளுக்குக் கல்வியின் அடிப்படையில் வழங்கப்பட்ட பிறவகை வழக்கமான உதவிகளும் ஆதரவுகளும் அவர்களுக்குக் கிடைக்காமல் போனதை உணர முடிகிறது,” என்று தியோ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக இல்லமிருந்து கற்றலைச் செயல்படுத்தினாலும், அதற்கான தயாரிப்பு மற்றும் தயார்நிலை இன்னும் சராசரிக்குக் குறைவாகவே உள்ளது என்று தியோ கூறுகிறார்.

“வீட்டிலுள்ள கற்றல் தரத்தை நிர்ணயிக்கும் மூன்று முக்கியமான சிக்கல்கள் – அதாவது பொருத்தமான கருவிகள் அல்லது சாதனங்களுக்கான அணுகல், இணைய இணைப்பு மற்றும் அலைவரிசை மற்றும் கல்வி தொலைக்காட்சிக்கான போதுமான உள்ளடக்கம் – பெரும்பாலும் தீர்க்கப்படாதவை மற்றும் குறுகிய விநியோகத்தில் உள்ளன.

“எனவே, பள்ளியை மீண்டும் திறப்பது நமது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஜனவரி மாதம் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, ஆசிரியர்களுக்குக் கோவிட் -19 தொற்றுக்குச் சாதகமாக சோதனை முடிவுகள் வந்த பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று அவர் எடுத்துரைத்தார்.

“இது நிறைய பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. குழந்தைகள் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, குழந்தைகளைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று பெற்றோர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

“ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவது ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும், மேலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் கல்வி சுற்றுச்சூழல் அமைப்பில் நிலைத்தன்மையை வழங்குவதற்கும் இது ஒரு முக்கியமான படியாக கருதப்பட வேண்டும்.

“ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களும் நாட்டிற்கு ஒரு மதிப்புமிக்க வளமாகும், இது போன்ற நேரத்தில் அவர்களின் மதிப்பை நாம் மறந்துவிடக் கூடாது,” என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ கூறினார்.