தோமி தாமஸின் புத்தகம் தொடர்பான விசாரணையைக் காவல்துறை தொடங்கியது

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏ.ஜி.) எழுதிய, ‘என் கதை : தரிசில் தேடும் நீதி’ (My Story: Justice In The Wilderness ) எனும் புத்தகம் தொடர்பான விசாரணையை, அதன் வெளியீட்டாளரிடமிருந்து காவல்துறை தொடங்கியுள்ளது.

தோமி தாமஸ் எழுதிய அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உட்பட, சில தரப்பினரால் எழுப்பப்பட்ட பல்வேறு விமர்சனங்களையும், பல புகார்களைப் பெற்ற பின்னர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இன்று பிற்பகல், மலேசியாகினியுடன் பேசிய ‘கெராக்புடாயா’ நிறுவனர் சோங் தோன் சின், கோலாலம்பூர், புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

“எந்தத் துறையினர் விசாரித்தனர் என்பது எனக்கு நினைவில் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி புத்தகத்தின் உள்ளடக்கங்களை நான் எங்கே பெற்றேன், அது எங்கே அச்சிடப்பட்டது போன்ற பொதுவான கேள்விகளை மட்டுமே கேட்டார்.

“இருப்பினும், எந்தச் சட்டப் பிரிவுகளின் படி நான் விசாரிக்கப்படுகிறேன் என்று என்னிடம் தெரிவிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

முன்னாள் சட்ட ஆலோசகர் III, முகமது ஹனாபியா ஜகாரியா அளித்த போலிஸ் புகாரைத் தொடர்ந்து, அவதூறு குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தாமஸை விசாரித்து வருகின்றனர்.

ஏ.ஜி. இட்ரிஸ் ஹருன் அந்த நினைவுக் குறிப்பைச் சட்ட நிறுவனத்திற்கு அவமானம் என்று விவரித்த போதிலும், தாமஸ் அந்த விமர்சனத்திற்கு அமைதி காத்து வருகிறார்.

‘மை ஸ்தோரி : ஜஸ்டிஸ் இன் தி வைல்டெர்னஸ்’ இப்போது அதிகாரிகளால் தடை செய்யப்படலாம்.

பெயரிடப்படாத ஒரு மூலத்தை மேற்கோள் காட்டி, ஃப்ரீ மலேசியா டுடே செய்தித்தளம், உள்துறை அமைச்சின் (கே.டி.என்) அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு அப்புத்தகத்தின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஆய்வுகள் முடிந்ததும், அவர்கள் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினுக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.

உள்துறை அமைச்சின் விசாரணை குறித்து கேட்டபோது, அதன் அதிகாரி ஒருவர் அப்புத்தகத்தை வாங்கியதாக சோங் தெரிவித்தார்.

செப்பாங்கில் ஒரு போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தங்கள் விசாரணைக்காக கெராக்புடாயா’விடம் இருந்து புத்தகத்தை வாங்க வேண்டி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அதிகாரப்பூர்வக் கடிதம் இல்லாவிட்டால் அவர்கள் புத்தகத்தை வாங்கியாக வேண்டும்,” என்று கூறிய சோங், கெராக்புடாயா தொடர்ந்து புத்தகத்தை விற்பனை செய்யும் என்றார்.