அனைத்து பண்டிகைகளுக்கும் நிலையான எஸ்.ஓ.பி. – திரெங்கானு பிகேஆர் முன்மொழிவு

அனைத்து பண்டிகைகளுக்கும் நிலையான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அரசாங்கம் வழங்க வேண்டும் என்று திரெங்கானு பி.கே.ஆர். தலைவர் அஸான் இஸ்மாயில் பரிந்துரைத்தார்.

இது கோவிட் -19 பரவலைத் தடுக்கும் சுகாதார காரணங்களுக்காக அல்ல, மாறாக அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்காக என்று அவர் தெரிவித்தார்.

“பண்டிகைகள் குறித்த அரசாங்கத்தின் எஸ்ஓபி-க்கள் மிகவும் குழப்பமானதாக இருக்கின்றன. எதிர்ப்பு இருந்தால், அரசாங்கம் மாற்றிவிடுகிறது. எனவே, இந்நடவடிக்கையானது அரசியல் கூறுகளைக் கொண்டிருப்பதாகவும், கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கானது அல்ல என்றும் தெரிகிறது.

“அனைத்து மத விழாக்களுக்கும் அரசாங்கம் ஒரு நிலையான வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும்,” என்று அவர் இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்ட எஸ்.ஓ.பி.-இல் முன்னர் கூறப்பட்டதுடன் ஒப்பிடும்போது, “ஒரு வீட்டிற்கு 20 பேர்” என்ற அதிகபட்ச வரம்பு விதியை, தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) இரத்து செய்துள்ளது.

இருப்பினும், புதிய எஸ்ஓபி பண்டிகையின் பெரிய விருந்தின் விதிகளைப் பராமரிக்கிறது, ஒரே வீட்டிலிருந்து குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியும்.

பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்பட்ட எஸ்ஓபி-யில், பெரிய விருந்து ஒரே வீட்டிலிருந்து அதிகபட்சம் 20 பேருக்கு மட்டுமே என்று எம்.கே.என். கூறியிருந்தது.

இருப்பினும், இன்று சில சீனர் சங்கங்கள், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகியத் தேதிகளில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கோவிட் -19 வழிகாட்டுதல்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் விவாதித்தபோது, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறினர்.

இதற்கிடையில், கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அனைத்து பண்டிகைகளுக்கும் நிலையான எஸ்ஓபி உருவாக்கப்பட வேண்டும் என்று அஸான் மேலும் கூறினார்.

அதிகரித்து வரும் பாதிப்புகளைப் பார்க்கும் போது, கடுமையான வழிகாட்டுதல்களுடன் மக்கள் இனி பண்டிகைகளைக் கொண்டாடும் சாத்தியங்கள் இல்லை என்றும் அவர் சொன்னார்.

“குறிப்பாக, பண்டிகைகளுக்கு நிலையான எஸ்ஓபி-க்கள் இல்லை என்றால், மலாய்க்காரர்களுக்கு ஒன்று, இந்தியர்களுக்கு ஒன்று, சீனர்களுக்கு மற்றொன்று என தற்போதுள்ள வழிகாட்டுதல்களால் மக்கள் குழப்பமடைவார்கள். எனவே, அதற்காக ஒரு நிலையான எஸ்ஓபி தேவை,” என்று அவர் விளக்கினார்.

பதிவுக்காக, முஸ்லிம்கள் எதிர்வரும் ஏப்ரல் 13-ல், இரமலான் மாதத் தொடக்கத்தையும், மே 13-ல் நோன்புப் பெருநாளையும் கொண்டாட உள்ளனர்.