பிப்ரவரி 9-ம் தேதி, இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கான மாணவர்களுக்கு நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள் நிறுத்தப்படுவது குறித்து கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடின் விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
எஸ்.பி.எம். மற்றும் எஸ்.வி.எம். மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக மலேசியக் கல்வி அமைச்சின் அறிவிப்புக்குப் பின்னர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் இதனைக் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் கல்வி அமைச்சரான மஸ்லீ, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களைப் போல, தானும் அம்முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்.
சமீபத்திய நிலைமை, அத்துடன் தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, கல்வி அமைச்சுக்குக் காரணங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவரது பார்வையில், மக்கள் அமைச்சரிடம் இருந்து உண்மையில் ஒரு விளக்கத்தைப் பெற விரும்புகிறார்கள் என்றார் அவர்.
“இதுவரை, அமைச்சர் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் தொலைக்காட்சியில் தோன்றி, கேள்விகள் எழுப்புவதற்கும் செயல்பாட்டு பிரச்சினைகள் குறித்து உரையாடவும் விட்டுவிட்டார் […],” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, ஜனவரி 20-ம் தேதி தொடங்கிய நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள், இம்மாதம் 22-ம் தேதி தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக, 9-ம் தேதியுடன் முடிவடையுமென கல்வியமைச்சு கடந்த 4-ம் தேதி அறிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த கூலாய் எம்.பி.யும், முன்னாள் துணைக் கல்வி அமைச்சருமான தியோ நீ சிங், கல்வி அமைச்சின் அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஒரே அணுகுமுறையைப் பயன்படுத்தக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சிவப்பு மண்டலத்தில் பள்ளிகள் மூடப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், பசுமை மண்டலத்தில் உள்ளப் பள்ளிகளையும் மூட வேண்டியதன் அவசியத்தை அவர் மறுத்தார்.
“என்னைப் பொறுத்தவரை, தேர்வுகள் கொடுக்கப்பட வேண்டும். இயங்கலை கற்றல் கிட்டத்தட்ட சாத்தியமற்றப் பகுதிகளுக்கு, நேருக்கு நேர் வகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.
“கல்வியமைச்சு (கே.பி.எம்.) அவர்கள் தான் நன்கு அறிந்தவர்கள் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும். உண்மையில், மாவட்டக் கல்வி இலாகாவுக்கு மிகவும் பொருத்தமான அணுகுமுறைகள் பற்றி அதிகம் தெரியும்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
பள்ளி அமர்வுகள் தொடர்பான கடைசி நிமிட அறிவிப்புகள் மற்றும் கொள்கை மாற்றங்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கடினமாகிப் போனதால், கே.பி.எம். சமூக ஊடகங்களில் பல முறை விமர்சிக்கப்பட்டது.
மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கல்விக்குழுத் தலைவர் ஜலாலுதீன் அலியாஸ், கே.பி.எம்.-இன் அந்த முடிவைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதாக ஒப்புக் கொண்டார்.
“சுயத் தயாரிப்பு என்ற அடிப்படையில் எஸ்பிஎம் / எஸ்பிஎம்வி தேர்வுக்கு முன்னதாக, 14 நாட்களுக்கு மாணவர்களை ‘விடுமுறைக்கு’ அனுமதிக்கும் கே.பி.எம்.-இன் முக்கிய நோக்கம் என்ன?
“இந்தத் தேர்வுக்கு 14 நாட்களில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவ என்ன முறைகளைப் பயன்படுத்தப்படுவார்கள்?” என்று அந்த ஜெலெபு எம்.பி. தனது முகநூல் அறிக்கையில் கேட்டார்.
கடந்தாண்டு மாணவர்கள், கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை காரணமாக, எஸ்.பி.எம். மற்றும் எஸ்.வி.எம். தேர்வுகளுக்கான மதிப்பெண் வரைபடத்தை குறைக்க வேண்டுமென ஜலாலுதீன் பரிந்துரைத்தார்.
“மலேசியத் தேர்வு வாரியம் மற்றும் கே.பி.எம். இந்த இரண்டு பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண் வரைபடத்தைக் குறைப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் அமர்வுகள் கடந்த ஆண்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பி.கே.பி. அமல்படுத்தியதிலிருந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடத் தொடங்கின, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு, பள்ளி கற்றல் கற்பித்தல்கள் பி.டி.பி.ஆருக்கு மாற்றப்பட்டன.
கோவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை மற்றும் பி.கே.பி.யை மீண்டும் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.